‘துயர் மிகுந்தது... ஆபத்தானது!’


செர்பியா நாட்டில் சீனாவின் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட லிங் லாங் டயர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறிப்பாக வியட்நாமியர்கள் நிலை பரிதாபகரமானது என செர்பிய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

900 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்நிறுவனத்தை செர்பியாவின் ஸ்ரெஞ்சானின் நகரில் நடத்திவருகிறது சீனா. ஐரோப்பிய நாடுகளில் சீனா செய்திருக்கும் மிகப் பெரிய முதலீடு இது எனக் கருதப்படுகிறது. 2018-ல் செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வூசிச் - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், புலிட்ஸர் விருது பெற்ற பத்திரிகையாளரான ஆண்ட்ரூ ஹிக்கின்ஸ், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில், சீன நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

தொழிலாளர்களும், செயற்பாட்டாளர்களும் ஆட்கடத்தல், சிறை போன்ற வாழ்க்கைச் சூழல் எனப் பல்வேறு துயரங்களையும் அபாயங்களையும் எதிர்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஹிக்கின்ஸ், அங்கு பணிபுரியும் 400 வியட்நாம் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், அதிகச் சம்பளம் வாங்கும் சீன சூபர்வைஸர்கள் அவர்களை மிக மோசமாக நடத்துவதாகவும் பதிவுசெய்திருக்கிறார். இந்நிறுவனத்தில் பணிபுரியும் வியட்நாம் தொழிலாளர், தங்கள் வாழ்க்கை துயர் மிகுந்தது; ஆபத்தானது எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, செர்பிய அரசுக்கும் சீனாவுக்கும் எதிராக செர்பிய எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஓர் ஐரோப்பிய நாட்டில் சீனா இத்தனை ஆதிக்கம் செலுத்துவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x