லெபனானில் சீரழியும் பள்ளிக் கல்வி: பின்னணி என்ன?


ஒரு நாடு பொருளாதார ரீதியாகச் சரிவைச் சந்திக்கும்போது ஏற்படும் பின்விளைவுகள், குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதைக்கும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது லெபனான்.
2019 முதல் லெபனானின் கரன்ஸியான பவுண்டின் மதிப்பு சரியத் தொடங்கியது முதல் அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனர். அது கல்வித் துறையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் கொடூரமானவை!

லெபனானில் பணவீக்க விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம், குடிநீர் கட்டணம் தொடங்கி அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அனைத்தும் அந்நாட்டு மக்களைக் கடும் சிரமத்துக்குள்ளாக்கியிருக்கின்றன. மறுபுறம், எரிபொருள் விலை மளமளவென அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 75 சதவீத மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். பலர் வறுமைச் சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

அசிரியர்கள் போராட்டம்

ஜனவரி 10 முதல் அந்நாட்டின் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து, பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைவான சம்பளம்.

ஆசிரியர்களின் சம்பளத்தின் மதிப்பு, இன்றைய தேதிக்கு 100 அமெரிக்க டாலருக்கும் குறைவு. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 7,400 ரூபாய். பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்து வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்குக் கிடைக்கும் தொகை வெறும் ஒரு டாலர்தான்.

இதற்கிடையே, தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்த பல பெற்றோர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அரசும் முன்வரவில்லை.

கல்வியையும் தொடர முடியாமல் வேலைவாய்ப்புகளும் இல்லாமல், பல சிறார்கள் ஆயுதக் குழுக்களில் இணைந்திருக்கின்றனர். பலர் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆரம்பத்தில் பல ஆசிரியர்கள் தங்கள் கஷ்டத்தையும் மீறி, தங்கள் சொந்தப் பணத்திலிருந்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்கித் தந்து உதவினர். எனினும், அவர்களுக்கே நெருக்கடி அதிகரித்துவிட்டதால் அந்த உதவிகளை அவர்களால் தொடர முடியவில்லை. பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு, இணையச் சேவை, அலைபேசிக் கட்டணம் போன்றவற்றுக்காகக் கூடுதலாக எந்தத் தொகையையும் அரசு வழங்கவில்லை.

பல பள்ளிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதால், குளிர்காலத்தில் மாணவர்களுக்கான உணவுகளைச் சூடுபடுத்துவதற்குக்கூட வசதி இல்லை. வாகனங்களை ஓட்டுவதற்குப் பெட்ரோல் போடவும் செலவழிக்க முடியாததால், பல பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் பலர், மேலும் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்திருக்கிறது. குழந்தைத் திருமணங்களும் அதிகரித்திருக்கின்றன. கல்வியையும் தொடர முடியாமல் வேலைவாய்ப்புகளும் இல்லாமல், பல சிறார்கள் ஆயுதக் குழுக்களில் இணைந்திருக்கின்றனர். பலர் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

2022 பட்ஜெட் வரைவு அறிக்கை தயாராகிவரும் சூழலில், ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனினும், ஆசிரியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களுக்கான ஆசிரியர்களின் பயணப்படித் தொகையை வழங்க அரசு முன்வந்திருக்கிறது.

அல் ஜஸீரா ஊடகத்துக்கு இது தொடர்பாகப் பேட்டியளித்திருக்கும் லெபனான் கல்வித் துறை அமைச்சர் அப்பாஸ் ஹலாபி, ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இது என்று கூறியிருக்கிறார். பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல், மதிய உணவு கிடைக்காமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு உதவ முன்வருமாறு சேவை அமைப்புகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

லெபனான் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டட்டும்!

x