இருளில் மூழ்கும் இலங்கை... வறுமையில் வாடும் மக்கள்!


இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது இலங்கையில். கடந்த சில மாதங்களாகவே இருந்துவரும் பொருளாதார இக்கட்டுகள் அடுத்த கட்டத்தைத் தொட்டுவிட்டன. உணவுப் பற்றாக்குறை உச்சம் தொட்டிருக்கிறது. தினமும் 3 வேளை உணவு உண்டவர்கள், இப்போது 2 வேளை உணவுக்கே என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். சமையல் எரிவாயு பயன்படுத்திவந்தவர்கள், விறகு அடுப்புகளில் சமைக்கத் தொடங்கிவிட்டார்கள். கையில் பணம் இருந்தாலும் உணவுப் பொருட்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அத்துடன், மின்னுற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடங்கல் நிஜமாகவே இலங்கையை இருளில் மூழ்கடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பொருளாதார நெருக்கடி படிப்படியாக மீட்சியடைந்துவருவதாகக் கூறினார். எனினும், அவை வெற்று வார்த்தைகள் என எதிர்க்கட்சிகள் சாடின. விலைவாசி உயர்வு, அதிகரித்துவரும் பணவீக்கம், எரிபொருள் தட்டுப்பாடு என எதைப் பற்றியும் அவர் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. என்ன நடக்கிறது இலங்கையில்?

கழுத்தை நெரிக்கும் கடன்

2009-ல் நிகழ்ந்த இறுதிப்போர், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் சிங்கள வெறியர்களுக்கும் வெற்றியைத் தந்திருந்தாலும், ஒட்டுமொத்தமான இலங்கையின் பொருளாதாரம் மெல்ல சரிவதற்கும் அது ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. அதேவேளையில், சீனா அளித்துவந்த நிதியுதவி இலங்கைக்குப் பேருதவியாக இருந்தது. சீனக் குடியரசை அமெரிக்கா, ஐநா அங்கீகரிப்பதற்கு முன்பே அந்நாட்டுடன் இலங்கையின் உறவு முகிழ்த்திருந்தது. நீண்டகாலம் தொடர்ந்த அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் இலங்கை உள்நாட்டுப் போரில், ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் சீனா வழங்கியது.

சீனாவிடமிருந்து மட்டுமே 5 பில்லியன் டாலரை இலங்கை கடனாகப் பெற்றிருந்தது. இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியின்போது உதவ, சீனா அளித்த 1 பில்லியன் டாலர் தொகை வேறு. இப்போது சீனா உட்பட பல நாடுகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை, இலங்கையை நெரித்துக்கொண்டிருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து 1 பில்லியன் டாலரை எடுத்துக் கொடுத்துச் சமாளித்தது. இப்போது அந்த நெருக்கடி முற்றிவிட்டது.

இதற்கிடையே, இயற்கை விவசாயத்தைப் பெரிதும் நம்பும் அதிபர் கோத்தபய ராஜபக்ச, இயற்கை விவசாயத்தை முழுமையாகப் பின்பற்றும் முதல் நாடாக இலங்கையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார். ரசாயன உரங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தார். அவற்றை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால், இலங்கையின் வேளாண் விளைச்சலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதில், இன்னொரு எதிர்பாராச் சிக்கலும் உருவானது. 2021 நவம்பரில், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த இயற்கை உரங்களில் ஆபத்தான நச்சு பாக்டீரியாக்கள் இருந்ததால் இலங்கை அதிருப்தியடைந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் தோன்றின. சீனாவின் முதலீட்டில் இலங்கையில் தொடங்கப்பட்ட திட்டங்களும் முடங்கின.

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு

கரோனா பெருந்தொற்றுப் பரவலால், இலங்கையின் ஜிடிபியில் 10 சதவீதமாக இருக்கும் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சரிவு அந்நாட்டையே உலுக்கிவிட்டது. இலங்கையின் பணமதிப்பும் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. சுற்றுலாத் துறையில் பணிபுரிந்துவந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்ட சூழல், இலங்கையை மேலும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. டிசம்பரில் பணவீக்க விகிதம் 12 சதவீதமாக இருந்தது. எரிபொருள் தொடங்கி உணவுப் பொருள்வரை எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் அந்நியச் செலாவணி முக்கியம் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவிக்கிறது. உணவுப் பொருட்கள் அடங்கிய 1,700 கன்டெய்னர்கள் இலங்கைக்குள் செல்லமுடியாமல் துறைமுகங்களில் தேங்கிக்கிடக்கின்றன.

எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு 25 கோடி டாலர் செலுத்த வேண்டிய இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தேயிலையை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிலைமையைச் சமாளித்துவருகிறது.

மின்வெட்டு அபாயம்

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க அதன் விலையை அதிகரித்தது இலங்கை. இதன் மூலம், தவிர்க்க முடியாத சூழலில் இருப்பவர்கள் மட்டும் பெட்ரோல், டீசல் வாங்க முன்வருவார்கள்; அதன் மூலம் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என்றுகூட இலங்கை அரசு கருதியது. ஆனால், நிலைமை நினைத்ததைவிட மோசமாகிவிட்டது. ஜனவரி 3-வது வாரத்துடன் கையிருப்பில் உள்ள எரிபொருள் தீர்ந்துவிடும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் உதய காம்மன்பில கூறியது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

டீசல் பற்றாக்குறை காரணமாக, களனிதிஸ்ஸ அனல் மின்சக்தி நிலையத்தின் 2 உற்பத்தி அலகுகள் மூடப்பட்டுவிட்டன. 1964-ல் தொடங்கப்பட்ட இந்த மின்னுற்பத்தி நிலையம்தான், இலங்கையின் முதல் அனல் மின்சக்தி நிலையம். நெருக்கடி முற்றியதைத் தொடர்ந்து, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் டீசலை வழங்கும் எனச் செய்திகள் வெளியாகின. அதன்படி 37,000 மெட்ரிக் டன் டீசல் அந்த மின்னுற்பத்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 10,000 மெட்ரிக் டன் டீசல் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படும்.

டீசல் கிடைத்ததால் இந்த நெருக்கடி தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. சப்புஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம், கொழும்பு துறைமுகத்தில் உள்ள மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் போன்றவையும் நெருக்கடிக்குள்ளாகி, தற்காலிக ஏற்பாடுகளால் மீண்டிருக்கின்றன. எனினும், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, இலங்கையில் இனி குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது மின்வெட்டு இருக்கும் எனத் தெரிகிறது. நீண்டநேர மின்வெட்டுக்குத் தயாராகுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வார நாட்களில், எந்தெந்த நேரத்தில் மின்வெட்டு இருக்கும் என்பதைச் சுட்டும் அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கைகொடுக்கும் இந்தியா

இந்தச் சூழலில் இந்தியத் தரப்பிலிருந்து நிதியுதவியுடன் உதவிக்கரம் இலங்கை நோக்கி நீண்டிருக்கிறது. இந்தியாவின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் திரிகோணமலை எண்ணெய் உற்பத்தி நிலையம் தொடர்பாக, இரு நாடுகளும் நெருங்கியிருக்கின்றன. 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி, திட்டமிடப்பட்ட இந்த உற்பத்தி மையம் இத்தனை ஆண்டுகள் தாமதமானதற்கு, சீனாவுடனான இலங்கையின் நெருங்கிய உறவும் ஒரு காரணம்.

தற்போது பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக இந்தியாவை இலங்கை நெருங்குகிறது. இந்தியா - இலங்கை இடையிலான உறவின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் இலங்கைக்குத் தேவையான நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார். இலங்கையின் கட்டமைப்பில் இந்தியாவின் முதலீடு இலங்கைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தற்போது 500 மில்லியன் டாலர் வழங்குகிறது இந்தியா. 2019-ல், இலங்கையின் கட்டமைப்புப் பணிகளுக்காக மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 450 மில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா வழங்கியது. 2020-ல் சூரிய மின்சக்தித் திட்டத்துக்காக 100 மில்லியன் டாலரை வழங்கியிருந்தது. சமீபத்தில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வகையில், 900 மில்லியன் டாலரை வழங்கியது. இப்போதும், 1 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியாவிடம் கோரி நிற்கிறது இலங்கை. இத்தனை உதவிகளுக்குப் பின்னரும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை தொடர்வது தனிக் கதை!

இதற்கிடையே, இலங்கை விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக் கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் கவனம் ஈர்க்கிறது. இவை அனைத்தும் ராஜதந்திர உறவுகள், பிணக்குகள் தொடர்பானவை. அதிபரின் நாடாளுமன்ற உரை போல, எதையேனும் சொல்லி அரசு சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், “என் பிள்ளைகளுக்குச் சரியான உணவு அளிக்க முடியவில்லை” எனக் கதறி அழும் தாய்மார்களின் கண்ணீருக்குத்தான், இலங்கையிடம் என்ன பதில் இருக்கிறது எனத் தெரியவில்லை!

x