அபுலியா (இத்தாலி): ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஜி7 கூட்டமைப்பு உள்ளது. இந்த ஆண்டில், ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்நிலையில் இத்தாலியின் அபுலியா நகரில் இந்த மாநாடுநேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.
ஜூன் 15-ம்தேதி (இன்று) மாலை மாநாடு நிறைவு பெற உள்ளது. இந்த மாநாட்டி்ன் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இம்மானுவேல் மேக்ரான்: மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது இருதரப்புக்கு இடையிலான உறவுகள் மேம்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "செமி கண்டக்டர், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்புத் துறையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினோம்" என்றார்.
பின்னர், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "போர் விவகாரத்தில், இந்தியா மனிதத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம்புகிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமே அமைதிக்கான வழியை காண முடியும் என்றும் இந்தியா நம்புகிறது என்று மீண்டும் வலியுறுத்தினேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப்புடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.