அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம் சாதி பாகுபாட்டை களைய முடிவெடுத்துள்ளது. இதன் பொருட்டு சாதி பாகுபாட்டிலிருந்து ‘பாதுகாப்பு வகை’ என்பதை பல்கலைக்கழக கொள்கையில் இணைத்துள்ளது.
கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டு 23 வளாகங்கள் உள்ளன. இதுதவிர 8 மையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 550 மாணவர்கள் பயில்கின்றனர். 55 ஆயிரத்து 909 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சாதி ரீதியான பாகுபாட்டிலிருந்து 'பாதுகாப்பு வகை' என்பதை 23 வளாகங்களுக்கும் அறிவித்துள்ளது. இதன் மூலம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்றதொரு உயரிய உயர்கல்வி நிறுவனத்தில் சமமான கல்வி பெறும் வாய்ப்பு சாதி ரீதியாகப் புறக்கணிக்கப்படும் சமூக அடுக்கைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளடங்கிய (inclusive) உயர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதை கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம் கொள்கையாகக் கொண்டுள்ளது. பல விதமான மாணவர்களையும் ஊழியர்களையும் வரவேற்று அவர்கள் வெற்றிபெற ஊக்கப்படுத்தவே சாதி ரீதியான ’பாதுகாப்பு வகை’ அமல்படுத்தியிருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜோசப் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதை வென்றெடுத்த பெருமை அமெரிக்க வாழ் கறுப்பின மக்களுக்கு உண்டு. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சாதிய ஒடுக்குமுறை நிலவி வருவதாக அண்மைக்காலமாகச் செய்திகள் பதிவாகின. அதிலும் நியூ ஜெர்சலி கோயிலுக்குள்ளும் கலிபோர்னியாவின் ஒரு உணவகத்திலும் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமை அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஆதிக்க சாதியினர் கூடவே சாதிய வெறியையும் மூட்டைக்கட்டி எடுத்துச் சென்றதே இதற்குக் காரணம் என்பதை 2016-ல் கள ஆய்வு மூலமாக நிரூபித்தது ’ஈக்வாலிட்டி லேப்ஸ்’ அமைப்பு. அமெரிக்க வாழ் பட்டியலின செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தர்ராஜன் தலைமியிலான ’ஈக்வாலிட்டி லேப்ஸ்’ (Equality Labs) நடத்திய ஆய்வில் அமெரிக்க வாழ் தலித் மக்களில் 60 சதவீதத்தினர் சாதி ரீதியான சீண்டலை எதிர்கொள்வதாகத் தெரியவந்தது. பணியிடங்களில் 67 சதவீதத்தினர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்வதாகப் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், சிவில் உரிமைகள் இயக்கங்களுக்கு அடுத்தபடியாக சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அமெரிக்கர்களுக்குச் சமூகநீதி கிடைக்க அமெரிக்கப் பல்கலைக்கழகம் முற்போக்கான முடிவு எடுத்திருப்பது பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டை எதிர்கொண்டுவரும் இந்தியர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இதேபோன்று சாதிப் பாகுபாட்டிலிருந்து ’பாதுகாப்பு வகை’ என்பதை அமெரிக்காவின் மற்றுமொரு புகழ்வாய்ந்த கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஹார்வர்ட் பட்டதாரி மாணவர்கள் சங்கம் முன்னெடுத்த தீவிர போராட்டமே அதற்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.