மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், நேற்று வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக்குடன் இருசக்கர வாகனமும் மற்றொரு மோதிய விபத்தில் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 59 பேர் காயமடைந்தனர்.
அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள போகோஸோ நகரத்துக்கும் பாவ்டீ நகரத்துக்கும் இடையில் உள்ள ஆபியேட் எனும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
சுரங்கப் பணிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ட்ரக் அது. விபத்தின் காரணமாக அந்த வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அருகில் இருந்த 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. வாகனங்களும் கடும் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் யாரும் வசிக்க முடியாத அளவுக்குக் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெடி விபத்தின் காரணமாக அருகில் இருந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தீ பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றனர். வெடிபொருட்கள் மீண்டும் வெடிக்கக்கூடும் எனபதால் பாதுகாப்பு காரணமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக, அருகில் உள்ள நகரங்களின் பள்ளிகள் மற்றும் தேவாலயங்களைத் திறக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்துக்கு கானா அதிபர் அகுஃபோ ஆடா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்து தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.