லைபீரியாவில் கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு


மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மோன்ரோவியாவில் உள்ள தேவாலயத்தில், நேற்று இரவு ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் சிறார்கள். இந்தத் தகவலை அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஜலாவா டோன்போ தெரிவித்திருக்கிறார். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோன்ரோவியாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள நியூ க்ரூ டவுன் பகுதியில் அமைந்திருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தில், இரவு நேரப் பிரார்த்தனைகள் நடக்கும். அருகில் உள்ள பள்ளி கால்பந்து மைதானத்தில் நடக்கும் கூட்டங்களில் பலர் கலந்துகொள்வார்கள். ஆப்ரஹாம் க்ரோமா எனும் பாதிரியாரின் தலைமையில் இந்தப் பிரார்த்தனைக் கூட்டம் நேற்று நடந்தது.

கொள்ளை முயற்சி

இந்நிலையில், அங்கு நடந்த கொள்ளை முயற்சியின் விளைவாகவே இந்தக் கூட்டநெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

“வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல், கூட்டத்துக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, அங்கிருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பி ஓடினார்கள். அப்போது பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பலர் ஏறி ஓடினர்” என நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ‘ஸோகோ’ என அழைக்கப்படும் வன்முறை கும்பல்கள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவது வழக்கம். உள்நாட்டுப் போர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு லைபீரியா. இதன் தொடர்ச்சியாக வறுமை, வேலைவாய்ப்பின்மை எனப் பல்வேறு சிக்கல்களில் இருக்கும் இளைஞர்கள் வன்முறை கும்பல்களாக உருவெடுத்திருக்கின்றனர். போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களும் லைபீரிய இளைஞர்களிடம் அதிகரித்திருக்கின்றன.

ஒருவர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த நபர் தனது கையில் வாளுடன் பிடிபட்டிருப்பதாகப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கும் லைபீரிய அதிபர் ஜார்ஜ் வியா, மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

x