ஹவுதி கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.
நேற்று, அபுதாபியில் உள்ள மூன்று பெட்ரோல் டேங்கர்கள் மீது ட்ரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அபுதாபி விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறித்து உடனடியாக ஐக்கிய அரபு அமீரகம் யார் மீதும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. எனினும், இதைச் செய்தது தாங்கள்தான் என ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் அறிவித்தனர்.
“அமீரகத்தின் மிக முக்கியமான தலங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என ஹவுதி படையினரின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா ஸரீ கூறியிருக்கிறார். அத்துடன், பொதுமக்களும் வெளிநாட்டு நிறுவனங்களும், தங்கள் பாதுகாப்பு கருதி இதுபோன்ற முக்கிய இடங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
ஏமன் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுதி படையினருக்கு எதிராகவும் தாக்குதல் நடத்திவரும் படைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் படைகளும் அடக்கம். ஹவுதி படையினர் மீது தாக்குதல் நடத்திவரும் ‘ஜயன்ட்ஸ் பிரிகேட்ஸ்’ எனும் படை, ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் செயல்படுகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக இந்தப் படைகள் செயல்படுகின்றன. 2019-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் படைகள் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. எனினும், ராணுவ ரீதியிலான உதவிகளை ஐக்கிய அரபு அமீரகம் செய்துவருகிறது.
ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் கொண்ட ஹவுதி படையினருக்கு, ஷியா ஆட்சி நடக்கும் ஈரான் ஆதரவளிக்கிறது.
சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன், முன்னேறிச் சென்று ஹவுதிக்களின் ஆதிக்கத்தில் உள்ள ஷப்வா மாகாணத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன. மரீப் மாகாணத்திலும் இந்தப் படைகள் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தத் தாக்குதல்களை ஹவுதி படையினர் நடத்தியிருக்கின்றனர்.
சவுதி அரேபியாவில் ஹவுதி படையினர் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பல் முறை நடத்தியிருக்கின்றனர். 2019 செப்டம்பர் 14-ல் சவுதி அரேபியாவின் இரண்டு மிகப் பெரிய எண்ணெய்க் கிணறுகள், ஹவுதி படையினர் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் பற்றியெரிந்தன. எனினும், இதுதான் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் ஹவுதி படையினர் நடத்திய முதல் பெரும் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், செங்கடல் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி பொருத்தப்பட்ட கப்பலைக் கைப்பற்றிய ஹவுதி படையினர், அதில் ராணுவத் தளவாடங்கள் இருப்பதைக் காட்டும் காணொலிப் பதிவை வெளியிட்டிருந்தனர். தற்போது அக்கப்பலின் 11 ஊழியர்கள் ஹவுதி படையினரிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கியிருக்கின்றனர். அது சாதாரண சரக்குக் கப்பல்தான் என ஐக்கிய அரபு அமீரகம் கூறியதை ஏற்க மறுத்த ஹவுதி படையினர், “அந்தக் கப்பல் ஒன்றும் குழந்தைகளுக்கான பொம்மைகளைக் கொண்டுசெல்லவில்லை. அவை தீவிரவாதிகளுக்கான ஆயுதங்கள்” என்று கூறியிருந்தனர்.
இந்தத் தாக்குதல்கள் மூலம் தாங்கள் முன்பைவிட அதிக பலம் பெற்றிருப்பதாகவும், சவுதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் துணிச்சலாகத் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் தங்களுக்கு ராணுவத் திறன் இருப்பதாகவும் ஹவுதி அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா, சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகளும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துப் பேசியிருக்கிறார்.
கொடூரமான இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகக் கூறியிருக்கும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சையத் அல்-நஹ்யான், “இந்தப் படுபாதகச் செயலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை தொடங்கிவிட்டது. ஏமன் தலைநகர் சனாவில் இன்று நடந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஹவுதி படையினர் தெரிவித்திருக்கின்றனர்.