ஒரு ஆறே தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு எதிர் பக்கமாக சில நாட்களுக்குப் பாய்கிறது என்றால் நம்புவோமா? ஆனால், அப்படி கம்போடிய நாட்டில் டோன்லி சாப் என்ற ஆறு கடலுக்கு எதிர்ப்புறமாக, வடக்கு நோக்கி சில நாட்களுக்குப் பாய்கிறது. எப்படி தானாகவே பாய்கிறதா? இல்லை. தென்மேற்கு பருவக்காற்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பலத்த மழையைக் கொண்டுவருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தக் காற்று வீசும். அப்படிப் பெய்யும் பருவமழையால், மீகாங் என்ற பெரிய நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். அப்படி ஓடி கடலில் கலக்க வேண்டிய நதி, அருகில் ஓடும் டோன்லி சாப் ஆற்றுக்குள் அப்படியே பாயும். அந்த வெள்ளத்தைத் தாங்க முடியாமல்தான் டோன்லி சாப் ஆறு தெற்கே பாய்ந்து கடலில் கலப்பதற்குப் பதிலாக, மீண்டும் வடக்கு நோக்கிப் பாயும். இயற்கையில் நடக்கும் இந்த அற்புதமான நிகழ்வை, கம்போடிய நாட்டில் விழாவாகவே கொண்டாடுவார்கள். அதற்கு வசதியாக நாட்டின் தலைநகரம், இவ்விரு நதிகளும் கடலில் சங்கமிக்கும் இடத்தில்தான் இருக்கிறது.
கோடைக்காலத்தில் மீகாங் நதி, டோன்லி சாப் ஏரியிலும் பாய்ந்து அதை மிகப்பெரிய நன்னீர் ஏரியாக மாற்றிவிடும். அப்படி வெள்ளம் பாயும்போது அதனுடன் ஏராளமான நீர்வாழ் உயிரினங்களும் பறவைகளும் பெருகி அங்கே எண்ணிக்கையில் அதிகமாகும். மீகாங்கில் கிடைக்கும் பூனைமீன் (கேட் ஃபிஷ்) மிகவும் சுவையானது மட்டுமல்ல, எடையில் 648 பவுண்டுகள் வரையும் இருக்கும். இப்படி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வடக்கு நோக்கிப் பாய்வது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். அதையே ‘பான் ஓம் டுக்’ என்கிற விழாவாகக் கொண்டாடுவார்கள்.
அப்போது ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி, மீன் உள்ளிட்ட உணவுகளைச் சமைத்து உண்டு, மது அருந்தி, ஆடிப்பாடி மகிழ்வார்கள். ஏரியில் படகுப்போட்டி, நீச்சல் போட்டி, தண்ணீர் விளையாட்டு என்று களைகட்டிவிடும். 2010-ல் மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர். அதன்பிறகு அரசு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போதோ இயற்கையே அந்த விழாக்களையெல்லாம் இனி நடத்த முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது.
உலகின் பல நாடுகளைப் போல, டோன்லி சாப் ஆற்றுப்படுகைகளிலும் ஏரியிலும் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாகி வருகிறது. விவசாயிகள் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். தனி மனிதர்களால் தீர்க்க முடியாத இப்பிரச்சினையை, சமூகமாகத்தான் அரசின் உதவியோடு எதிர்கொள்ள முடியும் என்று புரிந்துவைத்துள்ளனர். அரிதான நில வளத்தை, விவசாயத்தைவிட அதிக லாபம் தரும் நகர்ப்புற வீடமைப்புத் திட்டங்களுக்கு விற்றுவிடுகின்றனர். எனவே, ஒருபுறம் விவசாயத்துக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீர் வளம் குறைவதும் இன்னொருபுறம் விவசாயத்துக்கான நிலமே வேறு பயன்களுக்குத் திருப்பிவிடப்படுவதுமாக இரட்டைத் தாக்குதலை விவசாயத் துறை சந்தித்து வருகிறது.
டோன்லி சாப் ஏரி, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரியது என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றது. இப்போது ஆக்கிரமிப்பு காரணமாகவும், ஏரி நிலம், விவசாய நிலமாக மாற்றப்பட்டதால் பரப்பளவிலும் நீர்ப்பிடிப்பிலும் சுருங்கிவிட்டது. மீகாங் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஏரி தானாகவே நிரம்பிவழியும். டிசம்பர் தொடங்கி மே மாதம் வரையில் மழையற்ற வறண்ட காலமாகும். கடந்த சில ஆண்டுகளாக ஏரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குக்கூட கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு மேல்மடை விவசாயிகள் தண்ணீரை மடக்கிவிடுகின்றனர்.
கடந்த காலங்களில் ஆண்டுக்கு 2 போகம் தாராளமாக விவசாயம் செய்ய முடிந்தவர்களால், இப்போது ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியவில்லை. நெல்லும் உடன் காய்கறிகளையும் பயிர் செய்வார்கள். நெல் அறுவடைக்குப் பிறகு காய்கறிகளை 3 அல்லது 4 முறைகூட ஆண்டுதோறும் அறுவடை செய்வார்கள். ஆற்றில் வெள்ளம் பெருகுவதால் கிடைக்கும் தண்ணீரைவிட மழையாலும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. இப்போது மழையும் அதிக அளவும் அதிக நாட்களும் பெய்வதில்லை. ஆற்றுக்கு வரும் தண்ணீரை அரசு பெரிய நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கிறது. விவசாயம் தவிர குடிநீர்த் தேவைகளுக்கு, தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு, மீன்வளத்துக்கு, மின்சார உற்பத்திக்கு என்று அத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.
சமீப ஆண்டுகளாக கம்போடிய விவசாயிகள், விவசாயத் தேவைக்காக காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றுகின்றனர். தொடக்கத்தில் சில ஆண்டுகள் அவற்றில் சாகுபடியும் நடக்கிறது. காலம் செல்லச் செல்ல அங்கும் நீர்வளம் குறைந்தும் மண் சாரமிழந்தும் விவசாயம் செய்ய அதிக உரம் போட வேண்டியதாகிறது. மழையும் அதனால் குறைகிறது.
2019-ல் மீகாங் ஆறே வற்றிப்போகும் அளவுக்குப் பெரிய வறட்சி ஏற்பட்டது. அதன் துணை விளைவாக இந்த ஏரிக்கும் நீர்வரத்து மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மீளவில்லை. 2021-ம் ஆண்டு, காலமல்லாத காலத்தில் பெய்த மழையும் அடித்த காற்றும் விதைகளை முளைக்கவிடாமல் தடுத்துவிட்டன. நிலத்தில் ஊன்றப்பட்ட விதைகள் வெளியே வந்து அழுகிவிட்டன. பாரம்பரிய சாகுபடி முறைகள் மறைந்து வருகின்றன. விதைகளை நடுவதற்கும் களைகளைப் பறிப்பதற்கும் அறுவடைக்கும் இயந்திரங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய ஊதியம் சிறு விவசாயிகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. முன்னர்போல தேர்ந்த வேலையாட்களும் கிடைப்பதில்லை.
மீகாங் நதி தனது வாழ்நாளின் கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு, அதில் நீர்ப்பெருக்கு வற்றி வருகிறது. நீர்த்தேக்கங்களில் நீரைத் தேக்கி வைப்பதை விவசாயிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக, ஆங்காங்கே சிறிய ஏரிகளை அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. இவை, ஏற்கெனவே உள்ள ஏரிக்கு நீர் போக முடியாமல் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. அதுமட்டுமல்ல, ஆற்றிலும் ஏரிக்குப் போகும் வாய்க்காலிலும் மீன்கள் இயல்பாகச் சென்றுவந்த நீர்ப்பாதை அடைபட்டுவிட்டதால், மீன்பாடும் குறைந்து வருகிறது.
ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் வாய்க்காலை ஆழப்படுத்தினால் நிறைய நீர், மழைக்காலத்தில் வந்து நிரம்பும் என்று ஆசைப்பட்டு அதிக ஆழம் எடுத்துவிட்டார்கள். இப்போது வாய்க்காலில் உள்ள தண்ணீரை பக்கத்தில் உள்ள நிலங்களுக்குக்கூட எடுத்துப் பாய்ச்ச முடியாமல் தவிக்கிறார்கள். விவசாயிகளின் குடும்பத்தினர் இப்போது விவசாயம் தவிர, வேறு சிறு வேலைகளுக்குச் சென்று குடும்பங்கள் பட்டினியில்லாமல் வாழ முடியுமா என்று பார்க்கின்றனர். ஆற்றிலும் ஏரியிலும் தண்ணீர் மிதமிஞ்சி இருந்தபோது, இப்படியே காலம் முழுவதும் தொடரும் என்று நம்பினர்.
மழைநீரைச் சேகரிக்க வேண்டும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், சாகுபடி முறைகளையும் பயிர்களையும் மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்கு இல்லாமல் இருந்ததன் பலனை, இப்போது அனுபவிக்கிறார்கள். தெற்காசியா முழுவதிலும் விவசாயம் சந்திக்கும் பெரிய பிரச்சினை பருவநிலை மாறுதலால் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்றால் மிகையாகாது.