உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தை வரவேற்கும் வகையில், இந்திய மாநிலங்கள் பலதும் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுவித்து வருகின்றன. இந்த பட்டியலில் தமிழகத்தின் அதிகாரபூர்வ அழைப்பும் சேர்ந்திருக்கிறது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டெஸ்லாவின் இந்திய பிரவேசத்துக்கு எதிராக மத்திய அரசு விடுத்த சவால்கள் குறித்து அண்மையில் வெளிப்படையாகவே ட்விட்டரில் புலம்பி இருந்தார். இதனையடுத்து பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகள் சார்பில், எலான் மஸ்குக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் ட்விட்டர் வாயிலாகவே பகிரங்க அழைப்பினை விடுத்தனர்.
தற்போது இந்த அதிகாரபூர்வ அழைப்பில் தமிழகமும் சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நேற்று(ஜன.17) மாலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ’இந்தியாவின் மின் வாகன தலைநகராக விளங்கும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் எலான் மஸ்க்’ என அழைப்பு விடுத்திருக்கிறார்.
”எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக விளங்கும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் மொத்த திட்ட முதலீட்டில் 34 சதவீதத்தை வைத்திருக்கும் தமிழ்நாட்டிலிருந்து அழைக்கிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையில் உலகளவில் தமிழ்நாடும் முன்னணி வகிக்கிறது” என்ற பொருளில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ட்விட்டர் பதிவு அமைந்திருக்கிறது.
இந்த பதிவின் கீழ், தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் வாகன நிறுவனங்கள் அவற்றில் குறிப்பாக மின் வாகன நிறுவனங்கள் ஆகியவற்றையும் தங்கம் தென்னரசு பட்டியலிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மணலூர் ஆகிய இடங்களில் மின் வாகன உற்பத்திக்கு என தொலைநோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தலா 300 ஏக்கர் நிலம் குறித்த தகவலையும் தனது பதிவில் சேர்த்துள்ளார்.
இதன்கீழ் அமைச்சரின் பதிவினை வரவேற்றும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டும் ஏராளமானோர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.