தீயணைப்பு வீரர்கள், செவிலியர்களுக்குப் பற்றாக்குறை: திண்டாடும் ஜிம்பாப்வே


கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிரமும், அதைத் தொடர்ந்து உருவான பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக உலகமெங்கும் பல்வேறு பாதிப்புகள் உருவாகியிருக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்கில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் அது புதிய விதமான பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களும், செவிலியர்களும் அந்நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்திருக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல, நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் செல்லத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் தீயணைப்பு வீரர்களுக்கும் செவிலியர்களுக்கும் அவர்கள் வாங்கும் ஊதியத்தைப் போல பல மடங்கு உடனடியாகக் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இருப்பதால் குடும்பங்களைவிட்டு ஊரைவிட்டு, நாட்டைவிட்டுச் செல்லத் தயங்கியவர்கள்கூட மனதை திடப்படுத்திக் கொண்டு புறப்படத் தயாராகிவிட்டனர்.

ஜிம்பாப்வே நாட்டின் பொருளாதார நிலை படு மோசமாகக் கீழிறங்கிவிட்டது. மக்கள் வாங்கும் ஊதியம் உயரவேயில்லை. அந்நியச் செலாவணிகளுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுடைய வாங்கும் சக்தி அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. முன்னர் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றப் போதுமானதாக இருந்த வருமானம், இப்போது தனியொருவரின் தேவையை ஈடுசெய்யக்கூடப் போதவில்லை. பணவீக்க விகிதம் அல்லது பொதுவான விலைவாசி உயர்வு 60 சதவீதமாக இருக்கிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் பல அவசியப் பண்டங்களைப் பார்க்கக்கூட முடியாதபடிக்குச் சந்தையில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி மிக மிகக் குறைந்த அளவில்தான் நடக்கிறது. ஏழைகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது. உணவுப் பொருட்கள் மட்டுமல்ல எரிபொருட்களுக்கான விலையும் கடுமையாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் நாட்டின் உயிர்காக்கும் துறைகளில் கடுமையான ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

தலைநகரான ஹராரேயில் கடந்த ஆண்டு மட்டும் 125 தீயணைப்பு வீரர்கள், குடும்பச் செலவுக்கு வருமானம் போதாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மத்தியக் கிழக்கு, வளைகுடா மற்றும் இதர நாடுகளில் கிடைக்கும் வேலைகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு இப்போது சராசரியாக மாதம்தோறும் 200 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகத்தான் ஊதியம் கிடைக்கிறது. இதில் குடும்பத்துக்கான மளிகைச் செலவு, பால், காய்கறி, மருந்து-மாத்திரை, குழந்தைகளின் படிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு என்று அனைத்தையும் ஈடுகட்ட முடியாமல் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிச் சமாளித்துப் பார்த்தார்கள். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும் அதே பிரச்சினை என்பதால் கைமாற்று வாங்கக்கூட வழியில்லாமல்தான் மாற்று வேலைகளை யோசிக்கின்றனர்.

மிகுந்த பயிற்சிக்குப் பிறகு தீயணைப்பு வேலையில் திறமை பெற்று, அதைத் தாய் நாட்டுக்காகப் பயன்படுத்த முடியவில்லையே என்ற வேதனை, வேலையைவிட்டுச் செல்லும் ஒவ்வொரு தீயணைப்பு வீரரிடமும் இருக்கிறது. அதே சமயம், தீயணைப்புத் துறையே நிதி பற்றாக்குறையால் தள்ளாடுகிறது. எங்காவது பெரிய தீ விபத்து என்றால் வாகனத்தை நகர்த்தவே முடியாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படியே சமாளித்தாலும் வாகனங்களை வாங்கியே பல ஆண்டுகள் ஆனதால் மிகப் பெரிய தீ விபத்து என்றால் கருவிகள் ஒத்துழைப்பதில்லை. இதைக் களத்தில் இருக்கும் மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தீயணைப்பு வீரர்கள் அக்கறையில்லாமல் வேலை செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

ஜிம்பாப்வேயில் மாதம் 200 டாலர்களுக்கும் குறைவாக ஊதியம் வாங்கும் இவர்களுக்கு வெளிநாடுகளில் எடுத்த எடுப்பிலேயே 1,300 முதல் 1,500 வரை அமெரிக்க டாலர்களில் ஊதியம் தரப்படுகிறது. குடும்பச் செலவை மேற்கொள்வதுடன் பழைய கடன்களையும் அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்த வேலைகளுக்குச் செல்கின்றனர்.

தீயணைப்புத் துறையிலிருந்து 125 பேர்தான் வெளியேறியிருக்கின்றனர். சுகாதாரத் துறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்குத் தீயணைப்பு வீரர்களைவிட குறைவாகத்தான் சம்பளம் தரப்படுகிறது. மாதம் 200 டாலர்களுக்கும் குறைவு. அதுவும் மாதாமாதம் தரப்படுவதில்லை. கோவிட் பெருந்தொற்று காரணமாகப் பணி நேரமும் நீண்டுகொண்டே போகிறது. சுகாதாரத் துறைக்கு நிதி போதவில்லை என்பதால் செவிலியர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு அணிய வேண்டிய உடைகள், கையுறை, முகக் கவசம், கைகளைக் கழுவும் திரவம் போன்றவைகூட இல்லாமல் பணிபுரிய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் செவிலியர்களுக்குக் கடுமையான மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட வெளிநாடு செல்வதே நல்லது என்று முடிவெடுக்கின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க ஜிம்பாப்வே அரசு பிற நாடுகளிடம் நிதியுதவி கேட்டிருக்கிறது. எல்லா நாடுகளுமே இப்படி பெரும் பிரச்சினைகளில் ஒரே சமயத்தில் சிக்கியிருப்பதால் எங்கிருந்து யாருக்கு உதவி கிடைக்கும் என்பதும் தெரியவில்லை.

x