சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில், அரசு செய்தித் தொடர்பாளர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனப் பிரதமர் அலுவலகச் செய்தித்தொடர்பாளர் நஸ்ரா பஷீர் அலி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்..
சோமாலியப் பிரதமர் முகமது ஹுசைன் ரோப்ளேயின் செய்தித் தொடர்பாளரான முகமது இப்ராஹிம் மொயாலிமு, முன்னாள் பத்திரிகையாளர் ஆவார். அவரைக் கொல்ல ஏற்கெனவே சில முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இன்று முகமது இப்ராஹிம் மொயாலிமு தனது வீட்டிலிருந்து, பிரதமர் அலுவலகம் நோக்கிக் காரில் கிளம்பிச் சென்றபோது, அவர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆடையை அணிந்துவந்த நபர் ஒருவர், குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மொயாலிமு பயணித்த கார் கடும் சேதமடைந்தது. எனினும் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தில், அந்த நபர் உடல் சிதறி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து இன்னமும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஐநா ஆதரவுடன் நடந்துவரும் முகமது ஹுசைன் ரோப்ளே அரசுக்கு எதிராக, அல் ஷபாப் எனும் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுவருகிறது. அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருக்கும் ஆயுதக் குழுவான அல் ஷபாப் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். இன்று நடந்த தாக்குதலில் அந்த அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்துவருகிறது.
அதிபர் Vs பிரதமர்
அந்நாட்டின் அதிபர் முகமது அப்துல்லாஹி முகமதுவுக்கும், பிரதமர் முகமது ஹுசைன் ரோப்ளேவுக்கும் இடையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் நிலவுகின்றன. ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பிரதமரின் அதிகாரங்களைக் குறைப்பதாக, அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது அறிவித்தது இருவருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியிருந்தது. இது தனது அரசைக் கவிழ்க்கும் முயற்சி எனப் பிரதமர் முகமது ஹுசைன் ரோப்ளே கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல், அதிபர் தனது பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முயன்றபோது அதைப் பிரதமரும் எதிர்க்கட்சியினரும் இணைந்து எதிர்த்தனர்.
பிரதமருக்கும் அதிபருக்கும் இடையிலான மோதல், அரசியல் களத்தைத் தாண்டி ஆயுத மோதலாகவும் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா ராணுவத்திலேயே அதிபருக்கு ஆதரவாக ஒரு பிரிவும், பிரதமருக்கு ஆதரவாக இன்னொரு பிரிவும் செயல்படுகின்றன. இரு தரப்புக்கும் இடையிலான சண்டைகளால் இதுவரை ஏறத்தாழ 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாகியிருக்கின்றனர்.