முடிவுக்கு வந்த டெக்சாஸ் கடத்தல் நாடகம்: பிணைக் கைதிகள் நால்வரும் பத்திரமாக மீட்பு!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் யூத மத வழிபாட்டுத் தலத்தில், துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, 10 மணி நேரமாக நீண்ட கடத்தல் நாடகம், முடிவுக்கு வந்திருக்கிறது.

23,000 பேர் வசிக்கும் சிறுநகரமான கோலிவில், டல்லாஸ் வொர்த் கோட்டை சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது. அங்கு உள்ள யூதர்களின் ஆலயமான ‘பெத் இஸ்ரேல்’ பிரார்த்தனை மையம் இயங்கிவருகிறது. ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை ஷபாத் எனும் ஓய்வுநாளை யூதர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அந்த வகையில், ‘பெத் இஸ்ரேல்’ பிரார்த்தனை மையத்திலிருந்து ஷபாத் நிகழ்வின் நேரலைக்கான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர், யூத மதகுரு உள்ளிட்ட நால்வரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டார்.

டெக்சாஸ் மத்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் நரம்பிய விஞ்ஞானி ஆஃபியா சித்திக்கி தன்னுடைய சகோதரி என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த நபர் நிபந்தனை விடுத்தார்.

நேரலை துண்டிக்கப்படுவதற்கு முன்னர், அதில் கடத்தல்காரரின் குரல் பதிவானதாகச் சொல்லப்படுகிறது. பிணைக்கைதிகளிடம் கூச்சலிட்ட அவர், மதம் குறித்தும் தனது சகோதரி குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும், தான் மரணமடையப்போவதாகவும் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. சில இடங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தியிருந்ததாகவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் யூதர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேலும் இதுகுறித்து கவலை தெரிவித்திருந்தது. நிலவரம் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

பின்னணி என்ன?

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் நரம்பியல் விஞ்ஞானியான ஆஃபியா சித்திக்கி, டெக்சாஸில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொல்ல முயற்சித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 2010-ல், அமெரிக்க வீரர்கள் மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

’லேடி கொய்தா’ என அமெரிக்க அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் அழைக்கப்படுபவர் ஆஃபியா சித்திக்கி.

மீட்புப் பணிகள்

இதற்கிடையே, பிணைக்கைதிகளை மீட்கும் பணியில் ‘ஸ்வாட்’ குழுவினர் இறங்கினர். அந்தப் பகுதியில் வசித்துவருபவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எஃப்பிஐ-யைச் சேர்ந்த சமாதானக் குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்று கடத்தல்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு முதலில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். அவர் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு துப்பாக்கி முழக்கமும், குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டதாக, சம்பவ இடத்துக்கு அருகே இருந்த செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். கடத்தல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பிணைக் கைதிகள் நால்வரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“பிரார்த்தனைகள் பலித்துவிட்டன. பிணைக் கைதிகள் அனைவரும் நலமாக உள்ளனர்” என்று டெக்சாஸ் ஆளுநர் க்ரெக் அபாட் நேற்று இரவு ட்வீட் செய்தார்.

ஆஃபியா சித்திக்கி விளக்கம்

இந்தச் சம்பவத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என, சிறையில் இருக்கும் ஆஃபியா சித்திக்கி கூறியிருக்கிறார். கடத்தல்காரர் தனது சகோதரர் அல்ல என அவர் கூறியதாகவும், கடத்தல் சம்பவத்தைக் கண்டித்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

x