“இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இதை வைத்து யாரும் தப்புக்கணக்கு ஏதும் போட்டுவிட வேண்டாம்” என எச்சரித்துள்ளார், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே.
லடாக், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், ராணுவ தினத்தையொட்டி வீரர்கள் மத்தியில் பேசிய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே, “அமைதி நிலவ வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையிலிருந்து பிறந்தது. எனவே, இந்நாடு குறித்து யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இந்தியாவின் எல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும்.
இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். இந்திய எல்லையின் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது. என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல், எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் தயாராக இருக்கிறது. மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருகின்றனர்” என்று கூறினார்.