நியூயார்க்கில் வசித்துவரும் சீக்கியர் ஒருவர், டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்னர், ஜேஎஃப்கே விமான நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்துச் செல்ல அவர் சென்றிருந்தார்.
4-வது முனையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தனது காரை நிறுத்தியிருந்த அவர், ஒரு பயணி வந்ததும் காரை எடுக்க முயன்றார். அப்போது வேறு ஒரு நபரின் கார் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்ததைக் கவனித்த அந்த சீக்கியர், காரைச் சற்று நகர்த்துமாறு அவரிடம் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது கார் கதவை வேகமாகத் திறந்து அந்த சீக்கியர் மீது மோதச் செய்திருக்கிறார். பின்னர் சீக்கியரின் தலை, மார்பு, கைகள் என பல இடங்களில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
அத்துடன், அவரது தலைப்பாகையைத் தட்டிவிட்ட அந்த நபர், “தலைப்பாகை கட்டியவர்களான நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த நாட்டுக்குச் சென்றுவிடுங்கள்” என்றும் மிரட்டியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவுசெய்து காணொலியாக வெளியிட்டார்.
இந்தத் தாக்குதலை அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. தாக்குதலுக்குள்ளான சீக்கியர், தன் மீதான தாக்குதல் அதிர்ச்சியும் கோபமும் அளிப்பதாகக் கூறியிருக்கிறார்; இதுபோன்ற மோசமான அனுபவம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்றும் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார் என சீக்கியர் கூட்டணி அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனினும், அவரது பெயரை அந்த அமைப்பு வெளியிடவில்லை.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து துறைமுக ஆணைய காவல் துறையிடம் அந்த சீக்கியர் உடனடியாகப் புகார் அளித்திருந்தார்.
சீக்கிய அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தியத் துணைத் தூதரகம் எடுத்துச் சென்றது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஆழ்ந்த கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எஃப்பிஐ வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்காவில் நடைபெறும் மதரீதியான வெறுப்புக் குற்றங்களில் பாதிக்கப்படும் மூன்று சமூகத்தினரில் சீக்கிய சமூகத்தினரே அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்வதாகத் தெரியவந்திருக்கிறது.