ஒமைக்ரானுடன் பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிடுமா?


ஒமைக்ரானை வரவேற்கலாம் என்றும், பெருந்தொற்றை இந்த வைரஸ் திரிபு முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும் பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்தை மறுத்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். நேற்று (ஜன.12) ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடிகால இயக்குநர் மைக் ரயான், “ஒமைக்ரான், தீவிரத்தன்மை அதிகம் இல்லாத வைரல் தொற்றுதான். ஆனால், அது லேசான நோய் அல்ல” என்று கூறினார்.

“உலகம் முழுவதும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒமைக்ரான் லேசான நோய் பாதிப்பு அல்ல என்பதை இது துல்லியமாகக் காட்டுகிறது” என்று கூறியிருக்கும் அவர், "தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய் இது. தொற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், தடுப்பூசி செலுத்துக்கொள்வதன் மூலமும் தடுக்கப்படக்கூடிய நோய் இது" என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. விட்டுக்கொடுக்கும் நேரம் அல்ல இது. வரவேற்கக்கூடிய வைரஸ் என்று அறிவிக்கக்கூடிய நேரமும் அல்ல. மக்களைக் கொல்லும் எந்த வைரஸும் வரவேற்கத்தக்கதல்ல. குறிப்பாக, தடுப்பூசியின் சரியான பயன்பாடு மூலம் இறப்பையும், நோய்த் தொல்லையையும் தவிர்க்க முடியும் எனும் சூழலில், இந்த வைரஸை நிச்சயம் வரவேற்க முடியாது” என்றும் மைக் ரயான் கூறியிருக்கிறார்.

பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ

கரோனா பெருந்தொற்றை அணுகுவதில் ஆரம்பம் முதல் சர்ச்சைக்குரிய வகையிலேயே செயல்படுபவர் போல்ஸனாரோ. 2020-ல் கரோனா முதல் அலையின்போது, “இது சளிக் காய்ச்சலைவிட (Flu) ஒன்றும் மோசமான நோயல்ல” என்று சொன்னவர் அவர். பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் செல்வது, பலர் முன்னிலையில் இருமுவது, மக்களிடம் கைகொடுத்துப் பேசுவது என்று கரோனா காலத்தில் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாதோ, அவை அனைத்தையும் செய்தார். அவரே கரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

x