ஒமைக்ரான் யுகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்: உலக வங்கி எச்சரிக்கை


ஒமைக்ரான் பரவல் காரணமாக 2022-ல் உலக அளவில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் என்றும், நாடுகளுக்கு இடையிலும், ஒவ்வொரு நாட்டிலும் சமூகங்களுக்கு இடையிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி எச்சரிக்கிறது. விலைவாசி உயரும், அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

2021-ல் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 5.5 சதவீதமாக இருந்த நிலையில், அது 2022-ல் 4.1 சதவீதமாகக் குறையும் என்கிறது உலக வங்கி. இந்த வளர்ச்சி 4.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கியே கடந்த ஜூன் மாதம் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடுகளுக்கு இடையிலும், நாட்டுக்கு உள்ளேயும் வசதி படைத்தவர்களுக்கும் வறியவர்களுக்குமான வருவாய் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்று இதற்கு முன்னரும் உலக வங்கி எச்சரித்திருந்தது. பங்குச் சந்தைகளில் காணப்படும் குறியீட்டெண் உயர்வும், நிலம்-மனை விற்பனைத் துறையில் காணப்படும் எழுச்சியும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக உருவாகவே உதவும். அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள், மருந்து-மாத்திரைகள், உலோகங்கள், ஆடைகள், இதர நுகர்பொருள்களின் விலைகள் மேலும் உயர்வதால் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மேலும் சீர்குலையும்.

வளர்ந்துவிட்ட தொழில்வள நாடுகளைப் போல, உயர் வருமானம் இல்லாத வளரும் நாடுகளால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியே வர முடியாது என்பதால், அந்நாடுகள் மேலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்கிறது உலக வங்கி. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால், அரசுகள் விலையில்லாத உணவு தானியங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து, வரவைவிட செலவை அதிகம் செய்துவந்தன. இந்நிலையில், இனி தொடர்ந்து அப்படிச் செய்ய நிதியின்றி, பொருளாதாரத்தை முடுக்கிவிடவும் முடியாமல் அரசுகள் திணறும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

வளரும் நாடுகளில் பல (இந்தியா அல்ல), வட்டி வீதத்தை ஏற்கெனவே சில முறை உயர்த்தி அறிவித்துவிட்டதால் இப்போது புதிதாக மேற்கொண்டு வங்கி வட்டி வீதத்தையும் உயர்த்த முடியாமல் தத்தளிக்கின்றன. விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க பல நாடுகள் வட்டி வீதத்தை உயர்த்தின. ஆனாலும் விலையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அந்த நாடுகள் கடன் வாங்கித்தான் செலவைச் சமாளிக்கின்றன. வட்டிச் சுமை அதிகரிப்பால் அந்த நாடுகளுக்கு வெளிக்கடன் சுமை ஏறி வருகிறது. வளரும் நாடுகளில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வருமானம் – சொத்து மதிப்பு ஏற்றத்தாழ்வானது சமூகத்தில் அமைதியற்ற சூழ்நிலைக்குக் கொண்டுசெல்வதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

ஒமைக்ரான் பரவல் எத்தனை காலம் நீடிக்கும், அதன் போக்கு எப்படி இருக்கும் என்று மதிப்பிட முடியவில்லை. உயிரிழப்பு குறைவாக இருக்குமென்றாலும் நோய்க்கு ஆளானவர்கள் உடல் நிலை தேறி மீண்டும் வேலைக்கு வர சில மாதங்களாவது ஆகும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இது அரசுகளுக்குப் பொருளாதார ரீதியாக இன்னொரு இழப்பை ஏற்படுத்தும்.

அது மட்டுமின்றி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் விநியோகச் சங்கிலிகளில் தொடர்பு வலுவிழந்து சில தொழில்பிரிவுகளுக்கு மூலப் பொருட்கள் அல்லது துணைப் பொருட்கள் அல்லது தொழிலாளர்கள் கிடைப்பதுகூட தட்டுப்பாடுகளுக்கு உள்படலாம். அந்த நிலையில் பண வசதி மிக்க நாடுகள், கிடைக்கும் ஒரு சில பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளும். எனவே வளரும் நாடுகளுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும்.

இவை தவிர - கடுங்குளிர், நிலச்சரிவு, நிலநடுக்கம், ஆழிப் பேரலை, பனிப்புயல் போன்ற - இயற்கைப் பேரிடர்களாலும் பல நாடுகளில் உற்பத்தி குறைய வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன.

மேலும் சில நாடுகளில் அரசியல் சூழல் காரணமாக உள்நாட்டுப் போர்கள் நிகழ்கின்றன. வேறு சில நாடுகள் பக்கத்து நாடுகள் மீது போர் தொடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன. இவற்றால் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பணக்கார நாடுகளில் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 5 சதவீதமாக இருந்தது, இப்போது 3.5 சதவீதமாக இருக்கிறது, 2023-ல் அதுவே 2.3 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் வளர்ந்த நாடுகள் இந்தச் சூழலிலிருந்து விரைவில் விடுபட்டுவிடும்.

வளரும் நாடுகளில் கடந்த ஆண்டு 6.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 4.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு இது 4.4 சதவீதமாக இருக்கும். கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக இந்நாடுகளில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது.

உள்நாட்டுப் போர் உள்ளிட்ட மோதல்களுக்குள்ளான நாடுகளில் இந்த வளர்ச்சி பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்ததை விட 7.5 சதவீதம் குறைவாகவும் தீவு நாடுகளில் 8.5 சதவீதம் குறைவாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பெருந்தொற்றின் விளைவுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை நாடுகள் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்கிறது உலக வங்கி. தடுப்பூசிகள் கிடைப்பது மேலும் மேலும் எளிதாகிவிட்டாலும் கரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்களும், தேவைப்படும் பகுதிகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பிவைப்பதில் உள்ள இடர்களும்தான் பெரிய சவால்களாக இருக்கின்றன.

குறைந்த வருவாயுள்ள நாடுகளுக்கு உலக நாடுகள் கடன் நிவாரணங்களை அளித்தாக வேண்டும் என்கிறது உலக வங்கி. இது சமுதாயத்துக்கும் பொருந்தும்!

x