பெருந்தொற்று முதல் அலையின்போது நடந்த ‘பார்ட்டி’ : பிரச்சினையில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் பிரதமர்!


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கோவிட் 19 முதல் அலையின்போது, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘பார்ட்டி’ கொண்டாடியதாக எழுந்திருக்கும் புகார் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விருந்துக்காக தங்கள் வசம் உள்ள மதுபானங்களைக் கொண்டுவருமாறு, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் 100 ஊழியர்களுக்கு, உயரதிகாரி ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் கசிந்திருப்பதன் மூலம் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுக்க முதன்முதலாகப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், 2020 மே மாதம் 20-ம் தேதி இரவில், லண்டனின் டவுனிங் தெருவில் நம்பர் 10-ம் இலக்கத்தில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தின் தோட்டத்தில் அந்த விருந்து நடந்ததாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண் கேர்ரியும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது ( 2021 மே மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது).

அந்த விருந்தை ஏற்பாடு செய்ததில் போரிஸ் ஜான்சனின் பங்கு என்ன எனும் கேள்வி பூதாகாரமாக வெடித்திருக்கிறது.

“கடுமையான பணி நெருக்கடியை எதிர்கொண்டோம். எனவே, இன்று மாலை, நம்பர் 10 தோட்டத்தில் அழகான வானிலையை அனுபவிக்கும் வகையில், தனிமனித இடைவெளியுடன் பானங்கள் அருந்துவோம். மாலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த விருந்தில் கலந்துகொள்ளுங்கள். உங்கள் வசம் இருக்கும் மதுபானங்களைக் கொண்டுவாருங்கள்” எனப் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முதன்மைத் தனிச் செயலாளர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் 100 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக ஐடிவி நியூஸ் சேனல் நேற்று (ஜன.10) செய்தி வெளியிட்டிருக்கிறது.

30 முதல் 40 பேர் வரை அந்த விருந்தில் பங்கேற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்கள் உணவும் மதுபானமும் அருந்தினார்கள் என்கிறது அந்தச் செய்தி சேனல். அதேவேளையில், பல ஊழியர்கள் அந்த விருந்து குறித்து கேள்வி எழுப்பியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அந்த விருந்து, விதிமுறைகளுக்கு எதிரானது என பிரதமரின் உதவியாளராக இருந்த டொம்னிக் கம்மிங்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த விருந்து தொடர்பாகச் சில நாட்களுக்கு முன்னர் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

போரிஸ் ஜான்சனும் அவரது மனைவி கேர்ரியும்

முன்னதாக, 2020 மே 15-ம் தேதி மாலை ஒயின் மற்றும் பீட்ஸா சகிதம் நடந்த விருந்தில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டது குறித்த செய்தி ‘தி கார்டியன்’ இதழில் வெளியானது. ஆனால், அன்று மாலை ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்ததாக, பிரதமர் அலுவலகம் விளக்கமளித்தது. அந்தச் செய்தியில், ஒரு மேஜையில் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கேர்ரியும் 15 ஊழியர்களுடன் அமர்ந்து ஒயின், பீட்ஸா உட்கொண்ட புகைப்படத்தையும் இணைத்திருந்தது ‘தி கார்டியன்’ இதழ்.

பெருந்தொற்று சமயத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் பிரதமரே பொறுப்பற்ற வகையில் மதுபான விருந்தில் கொண்டாடியது விமர்சனத்துக்குரியது என எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன. போரிஸ் ஜான்சன் பதவிவிலக வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைக்குப் பின்னர் மீண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x