ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற, ‘ தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்ற மலையாளப் படம், இப்போது ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது.
சுராஜ் வெஞ்சரமூடூ, நிமிஷா சஜயன் நடித்து சூப்பர் ஹிட்டான மலையாள திரைப்படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜியோ பேபி எழுதி, இயக்கிய இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல், பிறகு மாநில ரசிகர்களிடத்திலும் வரவேற்பைப் பெற்றது. புதிதாகத் திருமணமான பெண், பழமைவாத குடும்பத்தில் ஆணாதிக்க கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் சந்திக்கும் பிரச்னைகளால் காயப்படுகிறார். அடுத்து அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கதை.
கடந்த வருடம் ஜனவரி மாதம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில், நிமிஷா மற்றும் சுராஜ் வெஞ்சரமூடின் நடிப்பு பாராட்டப்பட்டது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை உட்பட 3 பிரிவுகளில் கேரள அரசின் விருதைப் பெற்ற இந்தப் படம், தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இந்தப் படம் இப்போது ஜப்பானில் வெளியாகிறது. ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு, வரும் ஜன.22 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் ஜப்பானிய போஸ்டரை இயக்குநர் ஜியோ பேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.