போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ள உத்தரவிட்ட கஜகஸ்தான் அதிபரைப் பாராட்டிய சீன அதிபர்!


சீன அதிபர் ஜி ஜின்பிங்

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், விலைவாசி உயர்வு, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, மக்கள் நடத்திவரும் நிலையில், எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லுமாறு, பாதுகாப்புப் படையினருக்கு அந்நாட்டு அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அவர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டு போராட்டத்தை ஒடுக்கிவருவதாக அவரைப் பாராட்டியிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த கஜகஸ்தான், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் தனிநாடானது. அந்நாட்டின் முதல் அதிபராகப் பதவியேற்று, தொடர்ந்து 29 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நூர்சுல்தான் நாஸர்பயே மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2019-ல் அவர் பதவிவிலகினார்.

அவரது ஆட்சியில் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ், அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். வங்கித் துறை, சாலைப் போக்குவரத்து, கியாஸ் என அனைத்துத் துறைகளிலும் நாஸர்பயேயும் அவரது குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்துவதாக மக்கள் பொருமிக்கொண்டிருந்தனர். அத்துடன் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல் முறைகேடுகள் போன்றவற்றால் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்ததால் அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அது பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.

கஜகஸ்தான் அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ்

அந்நாட்டின் பெரிய நகரமான அல்மட்டியின் பிரதான சதுக்கத்தில் கூடி மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவின் அழைப்பின் பேரில் ஷ்யா தலைமையிலான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) எனும் ராணுவக் கூட்டணியின் சார்பில், கஜஸ்கஸ்தானுக்குப் படைகள் அனுப்பப்பட்டன. அந்தப் படையினர், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.

கஜகஸ்தானில் நடந்துவரும் வன்முறையில் தீக்கிரையான கார்

இந்நிலையில், இன்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் போராட்டக்காரர்கள் அழிக்கப்படுவார்கள் என்று அதிபர் எகஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ் எச்சரித்தார். மேலும், எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லுமாறும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை ஆயுதம் தாங்கிய 26 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கஜகஸ்தான் உள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. போராட்டக்காரர்களின் தாக்குதல்களில் காவல் துறை, தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் உள் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) படை பல நாட்களுக்கு அல்லது பல வாரங்களுக்கு அங்கு தங்கியிருக்கும் என அப்படையின் செயலாளர் கூறியிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி கூறியிருக்கிறது.

இந்தச் சூழலில், ஜகஸ்தான் அதிபர் டோகாயேவின் நடவடிக்கைகளைப் பாராட்டியிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். “நெருக்கடியான தருணத்தில் தீர்க்கமாக முடிவெடுத்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, விரைவில் பதற்றச் சூழலைத் தணித்திருக்கிறீர்கள். இது பொறுப்புள்ள உங்கள் நிலைப்பாட்டையும், அரசியல் தலைவராக உங்கள் கடமையையும் காட்டுகிறது. உங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நீங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கிறீர்கள்” என்று ஜி ஜின்பிங் புகழ்ந்திருக்கிறார். இந்தச் செய்தியைச் சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா வெளியிட்டிருக்கிறது.

x