ஜோகோவிச்சைப் போல வேறு யார் யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டது?


ஆஸ்திரேலிய உள் துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸ்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க, தடுப்பூசி செலுத்திக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளான செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்துவிட்ட நிலையில், ஏற்கெனவே வேறு சில சர்வதேச வீரர்கள் விலக்கு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதில் நடந்த குளறுபடிகள் வெளிவரும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரில், ஜனவரி 17 முதல் 30 வரை ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி நடக்கவிருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும்; அத்துடன் மருத்துவ ரீதியிலான விலக்கும் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், நோவாக் ஜோகோவிச் கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவிருந்த தகவல் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே விமானம் மூலம் துபாயிலிருந்து மெல்போர்ன் சென்றடைந்துவிட்ட அவருக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது. இதனால், அவர் மெல்போர்னின் டல்லமரீன் விமான நிலையத்தில் தனியறையில் தங்கவைக்கப்பட்டார். பின்னர் புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களைத் தங்கவைக்க பயன்படுத்தப்படும் பார்க் ஹோட்டலில் அவர் தங்கவைக்கப்பட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான பொருத்தமான ஆதாரத்தை அளிக்க ஜோகோவிச் தவறிவிட்டார். எனவே, அவரது விசா ரத்துசெய்யப்படுகிறது” என ஆஸ்திரேலிய எல்லைப் படை (ஏபிஎஃப்) அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசனும் இந்தத் தகவலை உறுதிசெய்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய உள் துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸ் கூறியிருக்கிறார். ஜோகோவிச்சுக்கு விசா வழங்குவதில் ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கும், ‘டென்னிஸ் ஆஸ்திரேலியா’ அமைப்புக்கும் இடையில் சரியான தகவல் தொடர்பு நிகழவில்லை என விக்டோரியா மாநில அரசு கூறியிருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான எந்தச் சான்றையும் ஜோகோவிச் அளிக்கவில்லை என ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெளிவாகச் சுட்டிகாட்டியிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், இதற்கு முன்னர் விலக்கு பெற்ற சர்வதேச வீரர்கள் தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்திவருவதாகவும் கூறியிருக்கிறார். எனினும், யார் யார் மீது விசாரணை நடத்தப்படுகிறது என அவர் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில், மெல்போர்ன் விமான நிலையத்தில் ஜோகோவிச் அடைத்துவைக்கப்பட்டதாக ஜோகோவிச்சின் குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் கேரன், “ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச் அடைத்துவைக்கப்படவில்லை. தன் விருப்பத்துக்கு இணங்க எப்போது வேண்டுமானாலும் அவர் வெளியேறலாம். எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

x