கஜகஸ்தானில் கால் பதித்த ரஷ்ய ராணுவம்: உக்ரைன் சிக்கலுக்கு நடுவில் இன்னொரு பிரளயம்!


மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், விலைவாசி உயர்வு, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, தொடர்ந்து 3-வது நாளாக மக்கள் நடத்திவரும் நிலையில், அவர்களை ஒடுக்க ரஷ்யா தலைமையிலான ராணுவப் படை களமிறங்கியிருக்கிறது. அந்நாட்டின் பெரிய நகரமான அல்மட்டியின் பிரதான சதுக்கத்தில் கூடி மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அங்கு சென்ற ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நேற்று அல்மட்டி மட்டுமல்லாமல் வேறு பல நகரங்களிலும் மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத பல காணொலிகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின.

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த கஜகஸ்தான், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் தனிநாடானது. அந்நாட்டின் முதல் அதிபராகப் பதவியேற்று, தொடர்ந்து 29 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நூர்சுல்தான் நாஸர்பயே மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2019-ல் அவர் பதவிவிலகினார்.

அவரது ஆட்சியில் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ், அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றார்.

கஜகஸ்தான் முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நாஸர்பயே

வங்கித் துறை, சாலைப் போக்குவரத்து, கியாஸ் என அனைத்துத் துறைகளிலும் நாஸர்பயேயும் அவரது குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்துவதாக மக்கள் பொருமிக்கொண்டிருந்தனர். அத்துடன் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல் முறைகேடுகள், மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது எனப் பல்வேறு பிரச்சினைகளும் மக்கள் மத்தியில் கோபக் கனலை மூட்டியிருந்தன.

அவர் பதவி விலகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைமை சீராகவில்லை என்பதால், தற்போதைய அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ் மீதும் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதுதொடர்பான எந்தப் புகாரையும் அதிகாரிகள் காதில் வாங்காமல் அலட்சியம் செய்ததும், நீதி கேட்டு மக்கள் வீதியில் இறங்க வழிவகுத்துவிட்டது. குறிப்பாக, பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்ததைக் கண்டித்து, கடந்த 3 நாட்களாகப் பொதுமக்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

எனினும், இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும்தான் என அறிவித்த அதிபர் டோகாயேவ், அல்மட்டி நகரம் அவர்களின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

கஜகஸ்தான் அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ்

இதையடுத்து, ரஷ்யா தலைமையிலான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) எனும் ராணுவக் கூட்டணியின் சார்பில், கஜஸ்கஸ்தானுக்குப் படைகள் அனுப்பப்படும் என நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. அந்த அமைப்பில் அர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எத்தனைத் துருப்புகள் அங்கு அனுப்பப்பட்டிருக்கின்றன, எத்தனை நாட்களுக்கு அவை அங்கு தங்கியிருக்கும் என இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. அந்தத் துருப்புகள் எத்தனை நாட்களுக்குத் தேவைப்படும் என கஜகஸ்தான் அதிபர் முடிவுசெய்வார் என ரஷ்யாவின் எம்.பி லியோனிட் கலாஷ்னிகோவ் கூறியிருக்கிறார்.

உக்ரைனில் நுழைய ரஷ்யப் படைகள் முயற்சி செய்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில், கஜகஸ்தானிலும் ரஷ்யா தலைமையிலான ராணுவக் கூட்டுப் படைகள் நுழைந்து மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ரஷ்யாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையில் நீண்ட நில எல்லை உள்ளது. ரஷ்யா தலைமையிலான பொருளாதாரக் கூட்டமைப்பிலும் கஜகஸ்தான் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ் பதவியேற்றதும் அவரை முதலில் அழைத்து வாழ்த்து தெரிவித்தவர் ரஷ்ய அதிபர் புதின் தான்.

உண்மையான அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்க அதிபர் டோகாயேவ் வழிவகுப்பார் எனும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் முற்றாக அகன்றுவிட்டது. அவர் பதவிவிலகி, மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் மக்களின் சார்பாக வீதியில் இறங்கிப் போராடும் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இந்த விவகாரம், ரஷ்யாவின் தலையீட்டுக்குப் பின்னர் சர்வதேச விவகாரமாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது.

x