ஜோகோவிச்சுக்கு விசா கிடையாது: ஆஸ்திரேலியா அதிரடி!


செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்

கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவிருந்த செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது.

“ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான பொருத்தமான ஆதாரத்தை அளிக்க ஜோகோவிச் தவறிவிட்டார். எனவே, அவரது விசா ரத்துசெய்யப்படுகிறது” என ஆஸ்திரேலிய எல்லைப் படை (ஏபிஎஃப்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசனும் இந்தத் தகவலை உறுதிசெய்திருக்கிறார்.

“யாரும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் எல்லை விஷயத்தில் விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும். உலகிலேயே, மிகக் குறைவான கோவிட் உயிரிழப்பு விகிதத்தை ஆஸ்திரேலியா கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், வலிமையான எங்கள் எல்லைக் கொள்கைகள்தான். இவ்விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறோம்” என்று ட்விட்டரில் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, தலைநகர் கான்பெராவில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மருத்துவ ரீதியிலான விலக்கு கோருவதற்கான பொருத்தமான ஆதாரங்களை அளிக்க ஜோகோவிச் தவறிவிட்டார் என்றும் விளக்கமளித்தார்.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரில், ஜனவரி 17 முதல் 30 வரை ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி நடக்கவிருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும்; அத்துடன் மருத்துவ ரீதியிலான விலக்கும் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் கலந்துகொள்ள மெல்போர்ன் வரவிருந்த ஜோகோவிச்சுக்கு மருத்துவரீதியிலான விலக்கு அளிக்கப்பட்டது ஆஸ்திரேலியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மருத்துவ ரீதியிலான விலக்கு கோரும் டென்னிஸ் வீரர்கள், இரண்டு கட்ட வழிமுறைகளைக் கடந்தாக வேண்டும். இதற்கான விண்ணப்பம் ‘டென்னிஸ் ஆஸ்திரேலியா’ அமைப்பின் மருத்துவ நிபுணர்களால் பரிசீலிக்கப்படும். அதன் பின்னர் விக்டோரியா மாநில அரசு அந்த விண்ணப்பத்தை ஆய்வுசெய்து முடிவெடுக்கும். இதற்காக, ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Atagi) விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இந்த விவகாரம், செர்பியா - ஆஸ்திரேலிய அரசுகளுக்கு இடையில் உரசலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியுடன் தொடர்புடைய 26 பேர் விலக்கு கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் வெகு சிலருக்கே விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசிக்கு எதிரான மனநிலை கொண்ட ஜோகோவிச்சுக்கு மட்டும் பிரத்யேகச் சலுகை காட்டப்படுவதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின.

விலக்கு அனுமதியுடன் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள மெல்போர்ன் வருவதாக, ஜன.4-ல் இன்ஸ்டாகிராமில் ஜோகோவிச் பதிவிட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டன.

துபாயிலிருந்து கிளம்பி 14 மணி நேர விமானப் பயணத்தின் முடிவில், மெல்போர்னின் டல்லமரீன் விமான நிலையத்துக்கு நேற்று (ஜன.5) இரவு 11.30 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) வந்து சேர்ந்தார் ஜோகோபிச். எனினும், அவருக்கு மருத்துவ ரீதியிலான விலக்கின் அடிப்படையிலான விசா வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்பில் ஒரு தனி அறையில் அவர் தங்கவைக்கப்பட்டார்.

விமான நிலையத்திலிருந்து, பார்க் ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோட்டல் அது. புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களை அங்கு அடைத்துவைப்பது வழக்கம்.

ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு ஜோகோவிச்சின் தந்தை சர்ஜான் ஜோகோவிச் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தனது மகன் மெல்போர்ன் விமான நிலையத்தில் 5 மணி நேரம் அடைத்துவைக்கப்பட்டதாகக் கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், “நமது பெருமைக்குரிய நோவாக் திரும்பிவருகிறார். அவரை நாம் அனைவரும் சென்று வரவேற்க வேண்டும்” என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கும் சர்ஜான், “இது நோவாக் ஜோகோவிச்சுக்கு நியாயம் கோரும் போராட்டம் மட்டுமல்ல, சுதந்திர உலகத்துக்கான போராட்டம். மொத்த உலகத்தின் சார்பிலும் நாம் போராட வேண்டும்” என்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம், செர்பியா - ஆஸ்திரேலிய அரசுகளுக்கு இடையில் உரசலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஜோகோவிச்சிடம் போனில் பேசியதாகக் கூறியிருக்கும் செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வூசிச், “ஒட்டுமொத்த செர்பியாவும் ஜோகோவிச்சின் பக்கம் நிற்கிறது. உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு நிகழ்த்தப்பட்ட தவறான அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் செர்பிய அதிகாரிகள் எடுத்துவருகிறார்கள். சர்வதேசப் பொதுச் சட்டங்களின் அடிப்படையில், ஜோகோவிச்சுக்கு நீதி கிடைக்கவும், உண்மையை நிலைநாட்டவும் செர்பியா போராடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜோகோவிச் வருகைக்கு ஆஸ்திரேலியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

x