அணு ஆயுதப் போரைத் தவிர்ப்போம்!


அணு ஆயுதத்தைக் கைவிட வேண்டும் எனும் குரல்கள், அமைதி விரும்பிகளிடமிருந்து தொடர்ந்து ஒலித்துவரும் நிலையில், அதை நோக்கிய பாதையில் அணுசக்தி நாடுகளே காலடி எடுத்துவைத்திருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் இதற்கான கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருக்கின்றன.

நேற்று (ஜன.3) வெளியான அந்தக் கூட்டறிக்கையில், “அணு ஆயுதப் போரை வெல்ல முடியாது; அணு ஆயுதப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த 5 நாடுகளும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தால் (1968) அங்கீகரிக்கப்பட்ட நாடுகள். ஐநா பாதுகாப்புக் கவுன்சிலிலும் நிரந்தர உறுப்பு நாடுகள். பி5 என்றும் என்5 என்றும் இந்நாடுகள் அழைக்கப்படுகின்றன. அணு ஆயுத நாடுகள் அவற்றைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அணு ஆயுதத்தைக் கொண்டிராத நாடுகள் அவற்றை அடைவதற்கு முயற்சிக்கக் கூடாது என்றெல்லாம் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் எனும் அபாயச் சூழல் உருவாகியிருக்கிறது. கூடவே, அமெரிக்கா - சீனா இடையிலான உரசல்கள், உக்ரைன் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பிணக்குகள் என உலகம் சற்று பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மூலம், போர்ப் பதற்றம் ஏற்பட்டால் அது அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்லலாம் எனும் அச்சம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக, இந்நாடுகளின் பிரதிநிதிகளிடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், இதுபோன்ற அபாயத்தைத் தவிர்ப்பது என முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த நாடுகள் ஒன்றுகூடி நடப்புச் சூழலை மதிப்பிடும் கூட்டம் நடைபெறும். ஒமைக்ரான் பரவல் காரணமாக அந்தக் கூட்டம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. 2020-லேயே நடந்திருக்க வேண்டிய இந்தக் கூட்டம் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டு வருகிறது. காணொலி மூலம் மெய்நிகர் கூட்டமாக அந்தச் சந்திப்பை நடத்துவது தொடர்பாக இன்னமும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதற்கு இடையில், இந்தக் கூட்டறிக்கை வெளியாகியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உண்டு. எனினும், அந்நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அணு ஆயுதத்தைக் குறைத்துக்கொள்ளவும் அந்நாடுகள் முன்வரவில்லை.

இதற்கிடையே, 2015-ல் ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. எனினும், ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் ஈரானுடனான பிணக்கு அதிகரித்ததால் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது. பிற நாடுகள் அதிலிருந்து விலகவில்லை என்றாலும், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் ஈரான் இன்னமும் அணுசக்தி விஷயத்தில் பிடிகொடுக்காமல் இருக்கிறது.

1985-ல் ஜெனிவாவில் நடந்த மாநாட்டில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகனும், ரஷ்யாவின் அப்போதைய அதிபர் மிகையீல் கோர்பச்சேவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்குப் பின்னர் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

x