வல்லரசு நாடான அமெரிக்காவில் உணவுக்கு அல்லாடும் மக்களும் இருக்கிறார்கள் எனும் செய்தி சிலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால், நிதர்சனம் அதுதான்.
2019-ல் அமெரிக்காவின் 10.9 சதவீத மக்கள், போதுமான உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கூடுதல் சத்துணவு உதவித் திட்டமான ‘ஸ்னாப்’ (SNAP) போன்ற திட்டங்கள் மூலம் உணவு விநியோகத்தை அதிகரிக்கும் பணிகளில் அமெரிக்க அரசு இறங்கியது. உணவு வங்கிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டன.
எனினும், கோவிட் -19 பெருந்தொற்றுப் பரவல் அந்நாட்டில் அதிகரித்ததைத் தொடர்ந்து, வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்கர்கள் சிக்கினர்.
இதனால், உணவு தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. 2019- ல் 3.5 கோடிப் பேர் உணவுத் தட்டுப்பாட்டால் அவதியுற்றுவந்த நிலையில், 2020-ல் அந்த எண்ணிக்கை 6 கோடியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 50 சதவீத அதிகரிப்பு இது.
இதையடுத்து ஸ்னாப் திட்டத்துடன், பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. நெருக்கடி கால உணவு உதவித் திட்டத்துக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்க அரசு ஒதுக்கியது, நிலைமையைச் சமாளிக்க உதவியது. இதனால், 2020-ல் உணவுத் தட்டுப்பாடு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், டெல்டா, ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது. உணவு வங்கிகள் அந்த அழுத்தத்தை நேரடியாக எதிர்கொள்கின்றன. உணவுப் பொருட்கள் விநியோகத்தில் சுணக்கம், தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை இந்த அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.
இதையடுத்து, அரசு இந்தப் பிரச்சினையைக் களைய கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
உணவுப் பொருட்கள் விநியோகத்தில் எழுந்த சிக்கல்களால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி, க்ரீம் கொண்ட வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.