இந்திய மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்த இலங்கையின் செயல் மனிதாபிமானமற்றது!


உயர் நீதிமன்ற மதுரை கிளை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் உடல் முழுதும் கிருமிநாசினி தெளித்தது மனிதாபிமானமற்ற செயல் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘இலங்கையில் மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களின் உடல் முழுதும் கிருமிநாசினி தெளித்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களில் 2 பேர் சிறுவர்கள். மீனவர்கள் அவர்களின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 68 மீனவர்களையும் விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கைதானவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றால், அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

மீனவர்களை அவர்களின் குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசச் செய்வதற்கான நடவடிக்கை பாராட்டுக்குரியது. மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பு மீனவர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது” என்றனர்.

அடுத்த விசாரணையை ஜன.7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

x