சமமற்ற நீதியுடன் ஒரு சமர்!


சமமற்ற நீதி (Uneven Justice). தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், அமெரிக்காவில் ஒரு தமிழர் நீதிக்காகப் போராடிய கதை, அந்தத் தலைப்பில் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 11 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற அந்த மனிதர், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி ஏழரை வருடங்கள் தண்டனை அனுபவித்து, தான் ஒரு நிரபராதி என நிரூபித்து விடுதலையான பின்னர் தனது மவுனத்தைக் கலைத்தார். தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு எவ்வாறு பின்னப்பட்டது, எவ்வாறு நடத்தப்பட்டது, சாட்சியங்கள் எப்படி தனக்கெதிராக உருவாக்கப்பட்டன என்பன போன்ற விடயங்களுடன் தான் பெற்ற அனுபவத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் அந்த எழுத்தாளர்.

சரி, தன் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும்தான் பேசுகிறாரா அந்த எழுத்தாளர்? இல்லை. தனது சகாக்கள் உட்பட அனைவரும், குறிப்பாக பொருளாதார அல்லது நிதி துறையின் வல்லுநர்கள் இந்த புத்தகத்தை வாசித்து, நடந்த உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என அவர் விரும்பினார் மேலும், சட்டவிரோதமாகத் தனது உரையாடல்கள் ஓட்டுக்கேட்கப்பட்டு, அந்த நாட்டின் பிரஜையான தான் கண்காணிக்கப்பட்டதன் ஊடாகத் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் பதிவுசெய்ய விரும்பினார்.

2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு அல்லது பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு பலிகடாவைத் தேடிய லட்சிய வழக்குரைஞர்களால் ஒரு பொறிக்குள் சிக்கவைக்கப்பட்டு, கண்ணியமான வாழ்வு சிதறடிக்கப்பட்டு, மன அழுத்தத்தை எதிர் நோக்கியதையும் அனைவரும் அறிய வேண்டும் என அவர் விரும்பினார். சில சீர்கேடான வழக்குரைஞர்கள் மற்றும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் குற்றவியல் நடத்தையிலிருந்து எப்படி தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்பினார். அதன் மூலம் ஒரு பொது விவாதத்தைத் தொடங்க எண்ணினார். அமெரிக்காவின் நீதி அமைப்பில் சமநிலைகள் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முயன்றார்.

சரி, யார் அந்த எழுத்தாளர்? அமெரிக்காவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த நிதி மேலாளராகத் திகழ்ந்த ராஜ் ராஜரட்ணம் என அறியப்படும் ராஜகுமாரன் ராஜரட்ணம்தான் அந்த எழுத்தாளர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், 11 வயதில் பிரிட்டனில் குடியேறினார். லண்டனில் அமைந்துள்ள டல்விச் கல்லூரியில் (Dulwich college) தனது கல்வியைத் தொடர்ந்த அவர், பட்டப்படிப்பைப் பொறியியல் துறையில், சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார். 1983-ல் தனது முதுகலைமானி பட்டப்படிப்பை அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் நிறைவு செய்து அங்கேயே ஒரு வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தனது பணியை ஆரம்பித்தார்.

1985-ல் நீதம் அண்ட் கோ (Needham & CO) நிறுவனத்தில் இணைந்து தனது கடின உழைப்பாலும் அசாதாரணத் திறமையாலும் படிப்படியாக உயர்ந்து தனது 34-வது வயதில் அதன் தலைவராக உயர்ந்தார். 1992-ல் நீதம் அண்ட் கோ கம்பெனியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘ஹெட்ஜ் நிதி’ (Hedge Fund) ராஜ் ராஜரட்ணத்தால் வாங்கப்பட்டு காலியன் குழுமம் (Galleon Group) எனப் பெயரிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. ஒரு குறுகிய காலத்தில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்த அவரது நிறுவனம், உலகின் முதல் பத்து ஹெட்ஜ் நிதி நிறுவனங்களுக்குள் தனது பெயரையும் உள்வாங்கிக்கொண்டது. மிகச் சிறந்த பகுப்பாய்வாளர்களை இணைத்து, அமெரிக்காவின் சட்ட திட்டங்களை மிகச் சரியான முறையில் பின்பற்றி மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த காலியன் குழுமம் மற்றவர்களின் கண்களை உறுத்தியதில் ஆச்சரியம் இல்லைதானே?

‘வால்ஸ்ட்ரீட் சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட ராஜ் ராஜரட்ணத்தை, 2009-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ், அமெரிக்காவின் 400 பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் 559 வது பணக்காரராகவும் மதிப்பிட்டது. அதே ஆண்டு அக்டோபர் 16-ல், சட்டவிரோதமான உள் வர்த்தக (insider trading) நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சுமத்தி அவரைக் கைதுசெய்தது எஃப்.பி.ஐ. அவருக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்டு குறைந்த அளவு தண்டனை பெறுதல், அரசாங்கத்தின் சாட்சியாக மாறி தண்டனையில் இருந்து தப்புதல், நிரபராதி என நிரூபிக்கப் போராடுதல். செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவிக்க அவருக்கு உடன்பாடில்லை. நேர்மையான வழியில் தனது வாழ்வை அமைத்துக்கொண்ட அவருக்கு, அரசாங்கத்தின் கையாளாக மாறி இன்னொருவரை வஞ்சக வலைக்குள் சிக்கவைத்துவிட்டு தப்பிக்கவும் மனமில்லை. எனவே அவருக்கு முன்னால் இருந்த தெரிவு தன்னை நிரபராதி என நிரூபிக்கப் போராடுவதுதான். ஆனால் அந்தப் பயணத்தில் பல மில்லியன் டாலர்கள் செலவு ஏற்படும் என்றும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அமெரிக்காவின் நீதித் துறையில் மிக நம்பிக்கை கொண்ட அவர் நீதிக்காகப் போராடத் துணிந்தார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாரானார்.

அந்த நீதிக்கான பாதையில் அவர் கண்டறிந்த விடயங்கள் பற்றியும், அவர் சந்தித்த பல விதமான மனிதர்கள் பற்றியும் அமெரிக்க நீதி துறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது போன்ற பல விடயங்களை இந்தப் புத்தகத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியாத அவர், அவரது சட்டத்தரணிகளுடன் இணைந்து தனக்கெதிராக புனையப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பல ஆதாரங்களை வழங்கியபோதும் அவற்றில் பல புறக்கணிக்கப்பட்டதையும் தமது பக்க சாட்சியங்களில் ஐந்து பேரை மட்டுமே உள்வாங்கிக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், நடுவர்கள் 12 பேரில் (Jury) ஒருவரும் துறை சார்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிதி மேலாண்மை மற்றும் முதலீடு தொடர்பான அறிவு இல்லாதவர்களுக்கு எவ்வாறு அதன் சட்ட முறைகள் நுணுக்கங்கள் பற்றி தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நடுவர் குழுவினரினால் குற்றவாளி எனத் தீர்க்கப்பட்டு 11 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன் 150 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் ராஜரட்ணம், இந்த முழு நூலையும் சிறையில் தனது கையாலேயே எழுதியதாகப் பதிவுசெய்திருக்கிறார்.

Uneven Justice: The Plot to Sink Galleon எனும் தலைப்பில் அமேசான் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியானது நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்குப் உதவுதற்குப் பயன்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதித் துறையினால் வஞ்சிக்கப்பட்டு, செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடிய வலிகள் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. இந்த நூல் அவரது வலி நிறைந்த குரல் மட்டுமல்ல. நீதி மறுக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் வாடும் அனைவரின் குரலாகும். சிறையில் இருப்போர் அனைவரும் குற்றவாளிகளுமல்ல. வெளியில் உலவுவோர் அனைவரும் நீதிமான்களுமல்ல!

ராஜி பாற்றர்சன், கனடாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், சர்வதேச ஐக்கியப் பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர், தொடர்புக்கு: rajipatterson3@gmail.com

x