சூடான் தங்கச் சுரங்கம் இடிந்துவிழுந்த விபத்தில் 38 பேர் உயிரிழப்பு!


மாதிரிப் படம்

சூடான் நாட்டில், பயன்பாட்டில் இல்லாத தங்கச் சுரங்கம் நேற்று (டிச.28) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தத் தகவலை அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான கனிம வள நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சூடான் தலைநகர் கர்த்தூமிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள என் நஹுத் பகுதியில் உள்ள ஃபுஜா எனும் கிராமத்துக்கு அருகில் இந்தச் சுரங்கம் அமைந்திருக்கிறது.

‘தர்ஸயா’ என்று அழைக்கப்படும் இந்தச் சுரங்கம் கைவிடப்பட்டுவிட்ட நிலையில், சுரங்கத்துக்குள் செல்வது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சிறிது காலத்துக்குப் பாதுகாப்புப் படைகள் காவல் பணியில் ஈடுபட்டுவந்தததாகவும், அங்கிருந்து படைகள் அகன்றுவிட்ட நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கு சென்று தங்கம் தோண்டியெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்தனர் என்றும் சூடான் அரசின் கனிம வள நிறுவனம் கூறியிருக்கிறது.

எனினும், இந்தச் சுரங்கம் எப்போது கைவிடப்பட்டது எனும் தகவலை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான சூடானில், 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தங்கச் சுரங்கத் தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது. முறைப்படி அனுமதி பெறாமல் இயங்கிவரும் சுரங்கங்களே அதிகம். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். சுரங்கங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, சுரங்க விபத்துகள் அங்கு அதிகம் நிகழ்கின்றன.

ஆபத்துகளுக்கு இடையிலும், இதுபோன்ற சுரங்கங்களிலிருந்துதான் 80 சதவீத தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2020-ல் 36.6 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம், தங்க உற்பத்தியில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இரண்டாவது நாடாக சூடான் உயர்ந்தது.

தங்கச் சுரங்கத் தொழிலை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

அப்தல்லா ஹாம்டோக்

இதற்கிடையே, அக்டோபர் 25-ல் சூடானில் ராணுவ சதி நடந்ததால், பிரதமர் அப்தல்லா ஹாம்டோக் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில், இந்தச் சுரங்க விபத்து அந்நாட்டினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

x