ஜாலியன்வாலா பாக் பழிவாங்கல் பெயரில் இங்கிலாந்து ராணிக்கு கொலை மிரட்டல்


இங்கிலாந்து ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்(இடது)

ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு பழிவாங்கல் என்ற பெயரில், இங்கிலாந்து ராணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலனியாதிக்க இந்தியாவில், பஞ்சாப் அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக் திடலில் 1919-ல், நடந்த கொடூர கொலைவெறித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியானார்கள். நாடு விடுதலை அடைந்த பிறகும், பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பஞ்சாபியர்கள் மத்தியில் இந்த சம்பவம் ஆறாத ரணமாக நீடிக்கிறது. ஒருசிலர் பழிவாங்கல் என்ற பெயரில், படுகொலை சம்பவத்துக்கு காரணமானோர் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றனர்.

அந்த வகையில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்று, திரைமொழிக்கான புனைவு கலந்து, அண்மையில் ‘சர்தார் உதம்’ என்ற இந்தி திரைப்படமாக வெளியானது. பரவலான வரவேற்பு பெற்ற அந்த திரைப்படத்தில், பல ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரியை உதம் சிங் என்பவர் பழிதீர்ப்பார்.

‘சர்தாம் உதம்’ திரைப்படக் காட்சி

இந்த உதம் சிங் பாணியில், தற்போது இன்னொரு மர்ம நபர் கிளம்பியிருகிறார். ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து ராணியே காரணம் என்று குற்றம்சாட்டும் அவர், தற்போதைய 2-ம் எலிசபெத் ராணியை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக ஸ்னாப்சேட் சமூக வலைதளத்தில் ஒருவர் பகிரங்க பிரகடனமும் செய்தார். முகமூடி அணிந்து, நவீன வில் அம்பு ஆயுதம் தரித்தவராக, ஜஸ்வந்த் சிங் என்ற இந்திய சீக்கியராக இந்த நபர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்

ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கு பழிதீர்க்க இங்கிலாந்து ராணியை கொல்லப்போவதாகவும் அவர் அறிவித்தார். இதற்கிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வின்ட்ஸர் கோட்டையில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து ராணிக்கான பாதுகாப்பு வளையத்தை ஊடுருவியதாக, 19 வயது இளைஞரை கடந்த ஞாயிறு அன்று போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த ஆயுதத்தையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அரசமைப்பில் தவிர்க்க முடியாதவராக விளங்கும் இங்கிலாந்து ராணியான 2-ம் எலிசபெத்துக்கு, தற்போது 95 வயதாகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மட்டுமே வின்ட்ஸர் கோட்டையில் ராணி தங்குவது வழக்கம் என்பதால், வழக்கத்தை விட பாதுகாப்பு வளையம் விரிவு செய்யப்படும். விபரமறியாது அதற்குள் நுழைபவர்களை போலீஸார் விசாரித்து அனுப்பி விடுவார்கள். அந்த வகையில் நடந்த சம்பவமா அல்லது ராணிக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்புடையதா என்ற தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

வின்ஸ்டர் கோட்டை

ஆனால், கைதானவர் நவீன வில் அம்பு ஆயுதம் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் அளித்த தகவல்கள் போலீஸாருக்கு குழப்பம் தரவே, மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கிலாந்து ராணிக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், பிரிட்டன் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக இங்கிலாந்து ராணிக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்த, தன்னை ஐஎஸ் ஆர்வலராக அறிவித்துக்கொண்ட சுதேஷ் அம்மான் என்ற 20 வயது இளைஞன், போலீஸாரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x