புதிய இந்தியத் தூதரைப் புகழ்ந்து தள்ளும் சீனா!


சீனாவுக்கான இந்தியத் தூதராக பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டதை வரவேற்று, சீன அரசின் அதிகாரபூர்வ ஏடான ‘குளோபல் டைம்ஸ்’ கட்டுரை வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஏற்கெனவே சில ஆண்டுகள் இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய ராவத், மிகச் சரளமாக சீன மொழியான மாண்டரின் மொழி பேசுவார். அதிலும் புதோங்குவா பாணியில் அவர் பேசுவதைச் சீனர்கள் மிகவும் ரசித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவருக்கு ‘லுவோ குவோடாங்’ என்ற சீனப் பெயரும் உண்டு!

இந்தியா குறித்து ஆய்வு செய்யும் சீன அறிஞர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர் ராவத். இந்திய – சீன உறவின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆதியோடு அந்தம் அறிந்தவர் என்று சிங்குவா பல்கலைக்கழக தேசிய ராணுவ உத்திக் கழக இயக்குநர் குயான் ஃபெங் அவரைப் பாராட்டியிருக்கிறார்.

ராஜதந்திரக் கலைகளில் தேர்ச்சி பெற்றவரான பிரதீப் குமார் ராவத் - ஹாங்காங், பெய்ஜிங் இந்தியத் தூதரகங்களில் 1992 முதல் 1997 வரையில் பணியாற்றினார். 1997-ல் டெல்லி திரும்பி கிழக்கு ஆசிய வெளியுறவுப் பிரிவில் 3 ஆண்டுகள் இருந்தார். பிறகு மீண்டும் 2003-ல் பெய்ஜிங்கில் இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கி, அதன் துணைத் தலைவர் பதவி வரையில் உயர்ந்து 2007-ல் அங்கிருந்து மீண்டும் மாற்றல் பெற்றார்.

சீனாவும் இந்தியாவும் தூதரக நிலைகளிலும் ராணுவ நிலையிலும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். எல்லையில் உரசல்கள் பெரிதாகிவிடாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றனர் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திங்கள்கிழமை தெரிவித்தார். சீனாவிலிருந்து விடைபெறும் இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரியுடன் வாங் யி, இம்மாதம் 6-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாகப் பேசி விடைகொடுத்தார்.

‘சீன-இந்திய உறவுகள் மேம்பட செய்யக்கூடியவை மூன்று, செய்யக்கூடாதவை மூன்று’ என்று வாங் யி தெரிவித்திருக்கிறார். “முதலாவது, நாம் இருவரும் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் – தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது, பரஸ்பரம் தவறாக கணித்துவிடக் கூடாது. 2-வது, ஏதோ ஒரு சம்பவம் அல்லது சந்தர்ப்பத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அதனால் அமைதியை இழந்துவிடக் கூடாது; நீண்ட கால நோக்கில் உறவை வலுப்படுத்த வேண்டும்.3-தாக, நம் இரு நாடுகளும் ஒருவரையொருவரை வலுப்படுத்துவதற்கான வேலைகளில்தான் ஈடுபட வேண்டும் – ஒருவரையொருவர் களைப்படையச் செய்யும் செயல்களில் இறங்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

வளரும் நாடுகளின் பொதுவான நலன்களுக்காக நாம் தொடர்ந்து இணைந்து நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். எல்லைப் பிரச்சினைகூட சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் தொலைபேசி வாயிலாகப் பேசினால் தணிந்துவிடும் என்று, இரு நாடுகளையும் நன்கு புரிந்து வைத்துள்ள ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவுடன் நல்லுறவையே சீனா விரும்புவதாக இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும் விதமாக புதிய தூதர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவிடம் இருக்கிறது. சீனாவை நன்கு தெரிந்தவர், சீன மொழியைச் சரளமாகப் பேசுவார் என்பதாலேயே உறவு சுமுகமாகிவிடாது, அப்படிப்பட்ட திறனுள்ள தூதர்கள் இதற்கு முன்னரும் இருந்தனர். ஆனால் உறவு வலுப்படவில்லை என்று சீன வெளியுறவு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதே வேளையில், கடந்த இருபதாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவு மேம்பட்டு வந்ததையும் பொருளாதார – தொழில் ஒத்துழைப்புகள் விரிவடைந்ததையும் சீனத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியபோது ராவத் நேரிலேயே பார்த்திருக்கிறார் என்று சீனத் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

தூதர்களால் மட்டுமே இரு நாடுகளிடையே உறவுகள் வலுப்பட்டுவிடுவதில்லை. அவரவர் தலைநகரங்களில் இருக்கும் அரசுகளின் முடிவுகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக உறவை மோசமாக்கிக்கொள்வதும் நடக்கிறது என்று சீனத் தூதரக வட்டாரங்கள், மறைமுகமாகப் பிற நாடுகளையும் சேர்த்து சுட்டிக்காட்டுகின்றன.

திடீரென லடாக் எல்லையில் சீனா மோதலுக்கு வந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு நடைபெறும் நேரம் என்பதாலும், கட்சிக்குள் தன்னை எதிர்ப்போரை அடக்கவும், சீன நலன்களுக்காக, தான் எந்தவிதத் துணிகர முடிவெடுக்கவும் தயங்கமாட்டேன் என்று காட்டவும் இந்திய எல்லையில் புதிய உரசலுக்கு அனுமதி தந்தார் அதிபர் ஜி ஜின்பிங் என்ற கருத்து நிலவியது. எனவே, சீன வட்டாரங்கள் கூறுவது அவர்களுடைய நாட்டுக்கு மிகவும் பொருந்துகிறது.

“பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியும் இந்திய அதிகாரிகள் குழுவும் பங்கேற்பர். எல்லைத் தகராறுக்காக ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க மாட்டோம்” என்று இந்தியா அறிவித்தது சீனாவுக்குப் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்தும், வாங்கியாக வேண்டிய அவசியத்தை அதனிடம் எடுத்துரைத்து அப்படியே வாங்குகிறது இந்தியா.

அது மட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புதினை டெல்லிக்கே வரவழைத்து உச்சி மாநாட்டு சந்திப்பும் நிகழ்த்தி, மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் செய்துகொண்டது. வெளியுறவுக் கொள்கையில் இந்தியா சுயமாகத்தான் செயல்படுகிறது என்று இந்த இரு முடிவுகளுக்காக இந்தியாவைப் பலமாகப் பாராட்டுகிறது சீனா.

புதிய தூதர் ராவத் என்ன செய்வார் என்று பார்க்கலாம்!

x