உலகம் முழுவதும் ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவிவருவதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, குளிர்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், நிலைமை அடுத்த சில வாரங்களுக்குக் கடினமானதாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.
ஒமைக்ரானின் பரவல் வேகம் குறித்து சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். டெல்டா வைரஸை ஒப்பிட ஒமைக்ரான் அதிக ஆபத்து கொண்டல்ல என்றாலும், தடுப்பூசிகளையும் தாண்டி அது தாக்கும் விதமும் சுகாதார நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தடுப்பூசி ஏற்கெனவே கரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படுகிறது. மற்ற கரோனா திரிபுகளை ஒப்பிடும்போது, ஏற்கெனவே தொற்றுக்குள்ளானவர்களை ஒமைக்ரான் வைரஸ் தாக்கும் வீதம் 5 மடங்கு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 26-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான், இன்றைக்கு 89 நாடுகளில் பரவியிருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்திருக்கிறது. இதுவரை ஒரே ஒருவர்தான் ஒமைக்ரான் தொற்றின் காரணமாகப் பலியாகியிருக்கிறார். எனினும், இந்தக் கரோனா வைரஸ் திரிபின் அசல் தன்மை என்னவென இறுதிசெய்யப்படாததால் இதைத் தீவிரமாகவே அணுகிவருகிறார்கள் உலக சுகாதார நிபுணர்கள். அந்த வகையில் அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆன்டனி ஃபவுசி நேற்று (டிச.19) தெரிவித்திருக்கும் கருத்துகள் கவனத்துக்குரியவை.
“ஒமைக்ரான் காரணமாக, பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிடாது என்றாலும், மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்படும் அளவுக்கு நிலைமை நிச்சயம் மோசமாகும் என்றே நினைக்கிறேன்” என அவர் கூறியிருக்கிறார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் குளிர்காலத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
டெல்டா வைரஸ் தொற்றாளர்களை ஒப்பிட, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதில்லை. ஆனால், இன்னும் ஓரிரு வாரங்களில் இந்நிலை மாறக்கூடும் என்றும், அப்போது நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போகலாம் என்றும் ஆன்டனி ஃபவுசி எச்சரித்திருக்கிறார். அமெரிக்காவில் கரோனா பரவல் கணிசமாக அதிகரித்திருப்பதில் ஒமைக்ரானின் பங்கு 3 சதவீதம். நியூயார்க் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்றுகளின் எண்ணிக்கை 22,000 எனப் பதிவாகியிருக்கிறது. இதுவரை கரோனா தொற்றால் அமெரிக்காவில் 8 லட்சத்தும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை ஊசிகளையும் செலுத்தி, பூஸ்டர் டோஸையும் போட்டுக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்திவருகிறது. தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறியிருக்கிறது.
“கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தகவல் உங்களுக்குக் கிடைக்கும்போது, நீங்கள் பொது இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உடனடியாக முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். 10 நாட்களுக்கு உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” எனத் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது.
நாளை (டிச.21), ஒமைக்ரான் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார் எனத் தெரிகிறது.