நாம் தமிழர் கட்சியினருக்கு சிங்கப்பூர் சிகப்புக் கொடி!


நாம் தமிழர் கட்சியினரை அவ்வப்போது திருப்பி அனுப்பிவந்த சிங்கப்பூர் அரசு, தற்போது வாழ்நாள் தடையையும் விதிக்கத் தொடங்கியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த குமார் என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பியதோடு, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருப்பூர் குமாரின் கட்சி செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாகவும் சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக இன்று(டிச.19) வேதனை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக குமாரை சிங்கப்பூர் திருப்பி அனுப்பி இருப்பது அவசியமற்றது. இதற்கு முன்பும் 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகளை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தூதரகத்தில் முறையிட்டும் பலனில்லை. சிங்கப்பூரில் ஒரு காலத்தில் வலிமையாய் இருந்த நாம் தமிழர் கட்சி தற்போது முழுமையாய் முடக்கப்பட்டிருக்கிறாது” என்றார்.

நாம் தமிழர் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகளை பல வருடங்களாக சிங்கப்பூர் அரசு தொடர்ந்து வருகிறது. சீமான் குறிப்பிட்டது போல நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஈழத்தமிழருக்காக நன்கொடை வசூல் செய்தது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கியது என நாம் தமிழர் கட்சியினரின் சிங்கை செயல்பாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் அதிருப்தி தெரிவித்து வந்தது. அவர்களில் பலரை பணியிலிருந்து நீக்கி, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் செய்திருக்கிறது. இதனால் பிழைப்புக்காகவும், குடும்ப சூழல் காரணமாகவும் சிங்கப்பூர் சென்ற இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

திருப்பூர் குமாருக்கு வாழ்நாள் விதிக்கப்பட்டிருப்பது, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை சோர்வடையச் செய்துள்ளது.

x