விமான விபத்தில் மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு


சவ்லோஸ் சிலிமா

பிளான்டயர் (மலாவி): மலாவி நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா (51)பதவி வகித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் காலை 9.17மணிக்கு தலைநகர் லிலாங்வேயில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டார். அவருடன் விமானிகள் உள்ளிட்ட 9 பேர்இருந்தனர். துணை அதிபரின் விமானம் மசுஸு விமான நிலையத்தில் காலை 10.2 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் போனதால் தலைநகர் திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கண்காணிப்பு ரேடாரில் இருந்து விலகி, அந்த விமானம் மாயமானது.

இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. இப்பணியில் ராணுவ வீரர்கள், காவல் துறைமற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் துணை அதிபர்பயணித்த விமானம் மலாவியின்வடக்கில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து மலாவி அதிபர் லாசரஸ் சக்வெரா நேற்று தனது தொலைக்காட்சி உரையில், விமான விபத்தில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவும் அவருடன் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்ததாக அறிவித்தார்.

மலாவியில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சவ்லோஸ் சிலிமா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மரணம் நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

x