திகைப்பூட்டும் த்வைட்ஸ் பனிப்பாறை


பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றை உன்னிப்பாகக் கவனித்துவரும் விஞ்ஞானிகள், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஓர் இடர் நேரும் என அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அன்டார்டிகாவில் உள்ள த்வைட்ஸ் பனிப்பாறை உருகிவரும் வேகம், விஞ்ஞானிகளை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏறத்தாழ பிரிட்டனின் பரப்பளவைக் கொண்ட இந்தப் பனிப்பாறை, ‘டூம்ஸ்டே’ (இறுதிநாள்) பனிப்பாறை என்றும் அழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே, ஒவ்வொரு ஆண்டும் கடல் மட்ட உயர்வில் 4 சதவீதம் த்வைட்ஸ் பங்குவகிக்கிறது. இந்தப் பனிப்பாறையின் அடிப்பாகத்தை, சூடான கடல் நீர் உருகச் செய்துவருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள், த்வைட்ஸ் பனிப்பாறை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இது நூற்றுக்கணக்கான பனிப்பாறைகளாக உடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பனிப்பாறை மொத்தமாக உருகிச் சிதறவும் வாய்ப்புகள் உண்டு. அது நிகழ்ந்தால் கடல் மட்டம் பல அடிகள் உயரும். கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அன்டார்டிகாவின் வெட்டல் கடலில் ‘லார்சென் பி’ எனும் பனிப்பாறை உடைந்து நொறுங்கி ஆயிரக்கணக்கான பனித்துண்டுகளாகப் பரவியது. ஏறத்தாழ 500 பில்லியன் டன் எடை கொண்ட அந்தப் பனிப்பாறை, எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் மிக வேகமாக உருகியது விஞ்ஞானிகளை அதிரவைத்தது.

லார்சென் பியைவிட 100 மடங்கு பெரிதான த்வைட்ஸ், 1990-களில் உருகிவந்ததைவிடவும் இப்போது மிக வேகமாக உருகிவருவதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அருகில் உள்ள பனிப்பாறைகளும் வேகமாக உருகும் தன்மையை அடைந்திருக்கின்றன. அப்படி உருகி உடையும் பனிப்பாறைகளை கடலில் சேர்ந்துவிடாத வகையில், பெரும் பரப்பளவு கொண்ட த்வைட்ஸ் தடுத்துவருகிறது. இந்நிலையில், த்வைட்ஸே உருகி உடைந்து, பிற பனிப்பாறைகளும் உடையும் நிலை ஏற்பட்டால், கடல் மட்டம் பெருமளவு உயர்ந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அன்டார்டிகா மட்டுமல்ல, ஆர்க்டிக் பகுதியிலும் புவி வெப்பமயமாதலின் தாக்கம் உணரப்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுத்து, புவி வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்துவதுதான் இதுபோன்ற அபாயங்களைத் தடுக்கும். காலம் கடத்தாமல் அதற்கான பணிகளைச் செய்ய அரசுகள் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் விஞ்ஞானிகள்.

x