பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் உள்ள ஷேர்ஷா பராச்சா சவுக் பகுதியில், இன்று (டிச.18) நடந்த எரிவாயுக் குழாய் வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த13 பேர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கால்வாய் வழியே செல்லும் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இது என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பில் கால்வாயை ஒட்டி கட்டப்பட்டிருந்த தனியார் வங்கிக் கட்டிடம் கடும் சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கிக்கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வங்கிக் கட்டிடத்திலிருந்து கால்வாய்க்குள் சிலர் விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர். சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுபோல பெரும் சத்தம் எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது எரிவாயு வெடி விபத்தா அல்லது குண்டுவெடிப்பா என்பதை வெடிகுண்டு நிபுணர் குழு கண்டறிந்து சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பயங்கரவாதத் தாக்குதலாக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் சிந்து மாகாண முதல்வர் சையது முராத் அலி, “இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்க போலீஸாரும் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.