பிலிப்பைன்ஸை உலுக்கியெடுத்த ‘ரய்’ புயல்


பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய வெப்ப மண்டலப் புயலான, ‘ரய்’ புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆகியிருக்கிறது.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சியார்காவோ தீவில் டிச்.16 அன்று வீசிய இந்தப் புயலின் வேகம், ஒரு மணி நேரத்துக்கு 195 கி.மீ எனப் பதிவாகியிருக்கிறது. நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சூறாவளி. இதையடுத்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீட்டைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பலர் வீட்டின் கூரைகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கானோர் வாடுகிறார்கள்.

தகவல் தொடர்பு சேவை பல இடங்களில் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவமும் கடற்படையும் இறங்கியிருக்கின்றன.

அருகில் உள்ள மிண்டானோ தீவிலும் சேதம் ஏற்பட்டிருப்பதாக, தேசிய பேரிடர் முகமை தெரிவித்திருக்கிறது. புயலால் சேதமடைந்த சுரியாகோ நகரின் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பிலிப்பைன்ஸ் கடற்படை வெளியிட்டிருக்கிறது. தனிநபர்கள் வெளியிட்டிருக்கும் காணொலிகளும் புயலின் வேகத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் காட்டுகின்றன. இந்தப் புயலை ‘ஓடெட்’ என அந்நாட்டு மக்கள் அழைக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகத் தயாராகிவந்த பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது ‘ரய்’ புயல்.

x