வட கொரிய முன்னாள் அதிபரின் 10-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம், நாட்டு மக்கள் சிரிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு 11 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
வட கொரியாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் கிம் ஜாங்-உன்னின் தந்தையுமான கிம் ஜாங்-இல், கடந்த 2011, டிச.17 அன்று மரணமடைந்தார். அன்னாரது 10-ம் ஆண்டு நினைவு தினத்தை வட கொரியாவில் 11 தினங்களுக்கு அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 11 தினங்களும் குடிமக்களுக்கான துக்க தினமாக அறிவிக்கபட்டுள்ளன.
11 நாள் நெடுக எவரும் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மது அருந்துவது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஷாப்பிங் செல்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல, சொந்த துக்க காரியங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவை மீறுவோர் கருத்தியல் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்றும், மீண்டும் அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்ப்பது கடினம் என்று அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அதிபரின் புகழை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கு நாடு முழுதும் ஏற்பாடாகி உள்ளது. இந்தக் கண்காட்சிக்கு வருகை தரும் குடிமக்கள் சோக முகத்துடன் இருக்குமாறும், துக்க காலம் முடியும்வரை பொது இடங்களிலும் அதையே பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.