பயங்கரவாத எதிர்ப்பு: பாகிஸ்தானுக்குக் குட்டு, இந்தியாவுக்குப் பாராட்டு!


ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், பயங்கரவாதிகள் குறித்த விசாரணை நடத்துவதிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. இவ்விஷயத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதாகவும் பாராட்டியிருக்கிறது.

பயங்கரவாதம் குறித்த சமீபத்திய அறிக்கையில் (Country Reports on Terrorism - 2020) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கும் கருத்துகள், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் பாகிஸ்தான் மீது அமெரிக்காவுக்கு இருக்கும் அதிருப்தியைக் காட்டுகின்றன.

“பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய செயல் திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் பாகிஸ்தான் போதுமான கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக, எந்தத் தாமதமும் பாரபட்சமும் இல்லாமல் எல்லா பயங்கரவாத அமைப்புகளையும் முடக்குவதாக அளித்த உறுதிமொழியைக் கடைபிடிக்கவில்லை” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. இவ்விஷயத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் விமர்சித்திருக்கிறது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் சஜித் மீர் போன்றோர் குறித்த விசாரணைகளில் பாகிஸ்தான் சுணக்கம் காட்டுவதாகவும் அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்புகள் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து அந்த அறிக்கை திருப்தி தெரிவித்திருக்கிறது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக அந்த அறிக்கை பாராட்டியிருக்கிறது.

எனினும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஐஎஸ், இந்தியத் துணைக் கண்டத்தின் அல்-கொய்தா (ஏக்யூஐஎஸ்), ஜமாத்-உல்-முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இந்தியாவில் செயல்பட்டுவருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பயங்கரவாதிகள் தொடர்பான சோதனை விவரங்களை இந்தியாவின் பன்முகவர் மையம் (எம்ஏசி), அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்வதாகவும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்பு காட்டுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

கார்கில் போருக்குப் பின்னர் இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்ட எம்ஏசி அமைப்பு, பல்வேறு விசாரணை அமைப்புகளுடனும் மத்திய, மாநில அரசுகளுடனும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது.

x