அமெரிக்காவுக்கு எதிராக அணி சேர்ந்திருக்கும் சீனாவும் ரஷ்யாவும் நிதிப் பரிமாற்றங்களுக்கு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்களுடைய யுவான், ரூபிள்களையே பயன்படுத்த முடிவு செய்துள்ளன. தென் சீனக் கடலிலும் பிற பகுதிகளிலும் தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சீனாவுக்கு எதிராகவும் உக்ரைனைக் கைப்பற்ற நினைக்கும் ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா பொருளாதாரத் தடை உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பிற நாடுகளும் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. உலகம் மீண்டும் இரு துருவ அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக, ரஷ்யாவை மேலும் பலவீனப்படுத்த பிரஸ்ஸல்ஸ் நகரை மையமாகக் கொண்ட ‘ஸ்விஃப்ட்’ என்ற கூட்டுறவு நிதியமைப்பிலிருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன.
இந்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் காணொலி வாயிலாக புதன்கிழமை (டிச.15) நீண்டநேரம் பேசினார். அப்போது, இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பொருளாதாரப் பரிமாற்றத்துக்கு, பொதுச் செலாவணியாக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்களுடைய நாட்டுச் செலாவணிகளான ரூபிள் – யுவான் ஆகியவற்றையே பரிமாறிக்கொள்வது என்று முடிவு செய்தனர். அதேபோல ரஷ்ய முதலீட்டாளர்களுக்குச் சீனப் பங்குச் சந்தையையும் சீன முதலீட்டாளர்களுக்கு ரஷ்யப் பங்குச் சந்தையையும் திறந்துவிடுவது என்றும் தீர்மானித்தனர்.
ஏற்கெனவே இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாகப் பேசி, ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளன. இப்போது நிதித் துறையிலும் உறவை வலுப்படுத்தவும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் பாதிப்பை ஏற்படுத்த முடியாத அளவுக்குத் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ளவும் தீர்மானித்துள்ளன. இவையெல்லாம் திட்டமிட்டபடி நடந்தாலும்கூட பெரிய முன்னேற்றங்களை அளித்துவிடாது என்றாலும் இரு நாடுகளையும் ஒதுக்குவதன் மூலம் அமெரிக்கா எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே, புதினும் ஜின்பிங்கும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.
இன்றைய உலகில் எதிரி நாடாக இருந்தாலும் சண்டையை ஒரு புறம் போட்டுக்கொண்டே, நமக்கு வேண்டிய மூலப் பொருட்களையும் முழுப் பண்டங்களையும் இறக்குமதி செய்வதுதான் புத்திசாலித்தனம் என்று வெளியுறவுத் துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய உதவுவதுடன் அமெரிக்கப் பொருட்களுக்கும் பெரிய சந்தையாக இருக்கின்றன. எனவே, அரசியல் காரணங்களுக்கான கோபதாபங்களைக் குறைத்துக்கொண்டு சுமுக உறவுக்கு வருவதுதான் புத்திசாலித்தனமாக இருக்க முடியும். அப்படி வருவதை விரைவுபடுத்தத்தான் இரு நாடுகளும் தங்களுக்குள் பொருளாதார ஒத்துழைப்பு குறித்துப் பேசியுள்ளன.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரோஸ்நெஃப்ட் என்ற கச்சா எண்ணெய் நிறுவனத் தலைவர் இகோர் செச்சின், டாலர்களை வேண்டுமென்றே அதிக எண்ணிக்கையில் அச்சிட்டு சந்தைக்கு விடுகிறது அமெரிக்கா என்று நவம்பர் மாத இறுதியில் குற்றம்சாட்டியிருந்தார். உலகப் பொருளாதாரத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இதைச் செய்கிறது என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவதால், அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடுகளைத் திரும்பப் பெற்று மீண்டும் அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். இது, சர்வதேசச் செலாவணிச் சந்தையில் பல நாடுகளின் செலாவணிகளை மதிப்பிழக்க வைத்து வருகிறது.
சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ராணுவ வல்லாதிக்கத்தைவிட, அவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதற்குச் சாதகமான அம்சங்களையும் முடக்க அமெரிக்கா சதி செய்கிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவரோவ் இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். அது ஓரளவுக்கு உண்மையும்கூட. அதற்காகவும் சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றன.
ரஷ்ய அதிபர் புதின் சமீபகாலமாக சீனாவுடன் அதிகம் கலந்துறவாடினாலும் ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கமாக இருப்பதையே விரும்புகிறார்கள். எனவே, இந்த உறவு இப்படியே நீடிக்குமா என்பதும் கேள்விக்குரியதுதான்!