அமெரிக்கத் துப்பாக்கிகளில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்ய குண்டுகள்!


உலக விவகாரங்களைப் பத்திரிகைகளில் படித்தவுடன் நமக்குள் ஏற்படும் எண்ணங்கள், பல்வேறு ஊகங்களுக்கு வித்திடும். உண்மை என்ன என்று தெரியும்போது, அடடா அப்படியா என்றே நினைக்கத் தோன்றும். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் உலக அரங்கில் பனிப்போர் நடக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை விஷம் வைத்துக் கொல்ல முயன்றது ரஷ்ய அரசு (விளாதிமிர் புதின்) என்ற கோபத்தில் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அந்தத் தடைகளில் ஒன்று ரஷ்யாவிடமிருந்து துப்பாக்கிகள், துப்பாக்கிகளுக்கான குண்டுகள் (புல்லட்டுகள்) போன்றவற்றை வாங்கக் கூடாது என்பது.

இதைப் படித்தவுடன், அமெரிக்காவிடம் இல்லாத துப்பாக்கிகளா – குண்டுகளா, பிறகு ஏன் ரஷ்யாவிடம் வாங்கப் போகிறது, இதெற்கன்ன தடை விதிப்பு என்றுதானே நமக்குத் தோன்றும். உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளை இறக்குமதி செய்யாவிட்டால் அமெரிக்கத் துப்பாக்கிகளில் பயன்படுத்த சரியான குண்டுகளே கிடைக்காதாம்!

இந்த ஆண்டு முதல் 10 மாதங்களுக்குள் சுமார் 16 கோடி அமெரிக்க டாலர்களுக்கு துப்பாக்கி குண்டுகளை மட்டும் இறக்குமதி செய்துகொண்டனர் அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்பாளர்கள். 1991-ல் சோவியத் ஒன்றியம் மறைந்து அதன் உறுப்பு நாடுகள் பிரிந்த பிறகு ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கர்கள் இந்த அளவுக்கு இதற்கு முன்னால் துப்பாக்கி ரவைகளை வாங்கியதே இல்லை. 2016-ல் 12 மாதங்களிலும் சேர்த்து 14.8 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இறக்குமதி செய்ததே இதுவரை அதிக அளவாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கு இறக்குமதி செய்த துப்பாக்கிக் குண்டுகளின் எடை 7,700 டன்களுக்கும் மேல்.

அமெரிக்க அரசு இந்தத் தடையை விதித்தபோதே அமெரிக்க தேசிய ரைஃபிள்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. நாம் வாங்காவிட்டாலும் ரஷ்யாவுக்கு நஷ்டம் இல்லை, காரணம் துப்பாக்கிக் குண்டுகள் விற்பனை மூலம் அதன் ஜிடிபியில் மிகச் சிறிய சதவீதம்தான் வருமானம் கிடைக்கும். நம்முடைய துப்பாக்கிகள் ரஷ்ய குண்டுகளை நம்பித்தான் இருக்கின்றன. இதை வாங்காவிட்டால் வெற்றுத் துப்பாக்கிகளுடன்தான் திரிய வேண்டும் என்று அந்தச் சங்கம் எச்சரித்தது. ஆனால் தடை அறிவிப்பில் இருந்த ஒரு ஓட்டையை அமெரிக்க இறக்குமதியாளர்கள் பயன்படுத்தி நிலைமையைச் சமாளித்துவிட்டனர். அது என்னவென்றால், தடை அறிவிப்புக்கும் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையில் உள்ள நாட்களில் ஆர்டர்கள் செய்திருந்தால் இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று அறிவிப்பில் தளர்வு அறிவிக்கப்பட்டது. தேவைப்பட்ட அளவுக்கும் அதிகமாக இந்த இடைப்பட்ட நாட்களில் ஆர்டர்களை அனுப்பி இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்துகொண்டுவிட்டனர் அமெரிக்கர்கள்.

இச்செய்தி மூலம், அமெரிக்க வல்லரசுகூட சில்லறை தயாரிப்புகளுக்குப் பிற நாடுகளைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு கேள்வி எழலாம். ‘அமெரிக்காவிலேயே தனியார் துறையில் ஆயுதங்களைத் தயாரிப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம், துப்பாக்கிக் குண்டுகளை ஆர்டர் செய்து ஆத்மநிர்பார் அடைய முடியாதா?’ என்று. துப்பாக்கிக் குண்டுகளைத் தயாரிப்பதில் அதிக லாபம் இல்லை என்பதாலும் அதற்கான சந்தை உள்நாட்டில் குறைவு, வெளிநாடுகளில் நம்மிடமிருந்து அதிகம் வாங்கமாட்டார்கள் என்பதால் எதற்கு வீண் முதலீடு என்று அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் அதில் இறங்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கத் தேவைகளுக்கேற்பவே ரஷ்யா குண்டுகளைத் தயாரித்து நிபுணத்துவம் பெற்றுவிட்டதால் வேறு எங்கு வாங்கினாலும் உள்ளூர திருப்தி இருக்காது என்பதும் ஒரு காரணம்.

பகை, தடை எல்லாம் வணிக உறவுகளுக்கு முன்னால் நிற்க முடிவதில்லை என்பதும் மற்றொரு காரணம்.

அவ்வளவு தீவிரமாகச் சீனாவை அமெரிக்கா விமர்சித்தாலும், அந்நாட்டிடமிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

x