அடிக்கடி எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம்: ஏன் இலக்காகிறது இந்தோனேசியா?


இந்தோனேசியாவில், இன்று காலை 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் கிழக்கு நுஸா தெங்கரா மாகாணத்தில், ஃப்ளோரஸ் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள ஃப்ளோரஸ் தீவின் மவுமேரா நகரைச் சேர்ந்த மக்கள் சுனாமி அச்சத்தில் அழ்ந்தனர்.

இந்தோனேசியாவின் வானிலை, பருவநிலை, புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமான பிஎம்கேஜி, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக, சமூகவலைதளங்களில் பல்வேறு காணொலிகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. கடல் மட்டம் சற்றே உயர்வதைக் காட்டும் காணொலியும் வைரலாகியிருக்கிறது. ஆனால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது சற்றே ஆறுதலான விஷயம்.

சக்திவாய்ந்ததும், மிதமானதுமான நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களை இந்தோனேஷியா சந்தித்திருக்கிறது. 1909 முதல் 2019 வரையில் மட்டும், 7 ரிக்டருக்கும் அதிகமான 150 நிலநடுக்கங்கள் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன என்கிறது அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரம். அதேபோல், அந்நாட்டில் எரிமலை வெடிப்புகளும் அதிகம். வெடிக்கும் நிலையிலான எரிமலைகள் அதிகமாக இருப்பது இந்தோனேசியாவில்தான்.

‘பசிபிக் நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கும் நாடான இந்தோனேசியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களை அடிக்கடி எதிர்கொள்கிறது. பசிபிக் பெருங்கடலின் படுகையில் காலணியின் அடிப்பாகத்தின் வடிவில் அமைந்திருக்கும் இந்த நிலப்பரப்பு, 40,000 கிலோமீட்டர் தூரம் விரிந்திருக்கிறது. நெருப்பு வளையத்தில், பூமிக்கு அடியில் ஏற்படும் டெக்டோனிக் தட்டுகள் நகர்வுகள், உலகின் 90 சதவீத நிலநடுக்கங்களுக்குக் காரணமாகின்றன. இங்குதான், உலகின் 75 சதவீத எரிமலைகளும் அமைந்திருக்கின்றன.

யூரேஷிய, வட அமெரிக்க டெக்டோனிக் தட்டுகளுடன், ஜுவான் டி ஃபுகா, கோகோஸ், கரீபியன், நாஸ்கா, அன்டார்டிக் தட்டுகள் மற்றும் இந்திய, ஆஸ்திரேலிய, பிலிப்பைன்ஸ் தட்டுகள் போன்றவை இந்தப் பகுதியில் பூமிக்கடியில் இருக்கின்றன. இவற்றின் நகர்வுகள், மோதல்கள், ஒன்றின் மீது ஒன்று உராய்வது, ஒன்றின் கீழாகவோ அல்லது மேலாகவோ வேறொன்று செல்வது போன்றவற்றால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. ‘மரியானா அகழி’ என அழைக்கப்படும் மிக ஆழமான அகழி இங்குதான் அமைந்திருக்கிறது. 7 மைல் ஆழம் கொண்ட இந்த அகழி, ஒரு டெக்டோனிக் தட்டு இன்னொன்றால் கீழ்நோக்கி அழுத்தப்பட்டதால் உருவானது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. ஒருவர் காயமடைந்திருக்கிறார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், டிச.4-ல் அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமெரு எரிமலை வெடித்ததில், இதுவரை 48 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

x