உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஒமைக்ரான்: சீனா, பாகிஸ்தானுக்குள்ளும் நுழைந்தது


கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலும் ஒமைக்ரான் நுழைந்திருக்கிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜிஜியாங் மாகாணத்தில் உள்ள டியான்ஜின் நகரில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு கடந்த சில வாரங்களாக டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது ஒமைக்ரான் தொற்றும் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து டிசம்பர் 9-ல் சீனாவுக்குச் சென்ற ஒருவர்தான் அந்நாட்டில் கண்டறியப்பட்டிருக்கும் முதல் ஒமைக்ரான் தொற்றாளர். அவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.

அருகில் உள்ள பெய்ஜிங் நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில், இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவரின் பின்னணி குறித்த வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்தவரல்ல எனும் தகவல் மட்டும் வெளியாகியிருக்கிறது.

ஜிஜியாங்க் மாகாணத்தில், கோவிட் கொத்துத் தொற்று (Covid cluster) இந்த ஆண்டு கண்டறியப்பட்டது. டிச.12 தேதி நிலவரப்படி சீனாவில் கொத்துத் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 80. அவர்களில் 74 பேர் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

புகழ்பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா அமைந்திருப்பது ஜிஜியாங்கில்தான். இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியிருக்கின்றன. அந்நிறுவனங்களின் பங்கு மதிப்பும் சரிந்திருக்கிறது.

மாகாண அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அந்நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

பாகிஸ்தானிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தொற்றுக்குள்ளான பாகிஸ்தானியர் ஒரு பெண் எனத் தெரியவந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் என்பது கூடுதல் தகவல். கடந்த வாரம், நெதர்லாந்து, குரேஷியா, ஹங்கேரி, உக்ரைன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளுக்குப் பாகிஸ்தான் பயணத் தடை விதித்திருந்தது.

இதற்கிடையே, பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. 2 முதல் 3 நாட்களில் ஒமைக்ரான் பரவல் இரு மடங்காக அதிகரிக்கிறது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் குறிப்பிட்டிருக்கிறார். லண்டனில் மட்டும் கரோனா தொற்றாளர்களில் 40 சதவீதம் பேர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

x