ஐஎம்எஃப் கடனா, ஐயோ வேண்டாம்!


கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் ஆழ்ந்திருக்கும் அர்ஜென்டினா நாட்டுக்குக் கடனுதவி தந்து உதவ. பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தயாராக இருக்கிறது. ஆனால். அந்நாட்டு மக்களோ ஐஎம்எஃப் அளிக்கும் கடனுதவி வேண்டவே வேண்டாம் என்று கதறுகிறார்கள். அரசிடம் அதை வலியுறுத்த. கடந்த சனிக்கிழமை (டிச.11) தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு இதைப்போல பல மடங்கு மக்கள் வந்திருப்பார்கள். ஆனால், அரசு செய்த ‘ஏற்பாடுக’ளால் அது தடைபட்டுவிட்டது. நாட்டின் தென் பகுதிகளில் விழிப்புணர்வுள்ளவர்கள் அதிகம். அவர்கள் வரமுடியாதபடிக்கு தெற்கிலிருந்து வரும் ரயில்கள், ‘பராமரிப்புப் பணிகள்’ காரணமாக நிறுத்தப்பட்டன. அரசுகள் திடீரென பராமரிப்பில் அக்கறை செலுத்துவதன் பின்னணி யாரும் அறியாததல்ல!

முதலில் மக்களைக் கவனியுங்கள்!

அர்ஜென்டினாவின் அதிபராக மௌரீசியோ மாக்ரி இருந்தபோது, அந்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த ஐஎம்எஃப்பிடம் 5,700 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் தொகை பேசப்பட்டு அதில் 4,400 கோடி டாலர்கள் பெறப்பட்டது. அந்தக் கடனைக் கொடுத்த கையோடு, ஐஎம்எஃப் விதித்த நிபந்தனைகளை அரசு நிறைவேற்றியதால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இதன் பிறகு 2020-ல் ஆட்சிக்கு வந்த அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், இன்னமும் எஞ்சியிருக்கும் தொகையை ஐஎம்எஃப் தர வேண்டாம் என்று வாங்க மறுத்துவிட்டார். அப்படியானால் வாங்கிய கடனை ஆண்டுக்கு 1,900 கோடி டாலர்கள் என்று 2022, 2023-ம் ஆண்டுகளில் கொடுத்துவிடுங்கள் என்று ஐஎம்எஃப் கறாராகக் கூறிவிட்டது. இது தொடர்பாக இப்போது அதனிடம் மீண்டும் பேச்சு நடத்துகிறது அரசு.

இந்த நிலையில்தான் தலைநகரில் திரண்டு போராடிய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த அரசியல் தொண்டர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் மேற்கொண்டும் கடன் வாங்க வேண்டாம், அவசரப்பட்டும் கடனைத் திருப்பித் தர வேண்டாம் என்று முழக்கமிட்டனர். முதலில், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊதிய வெட்டு ஆகியவற்றுக்கு ஆளாகியிருக்கும் மக்களைக் கவனியுங்கள். மீட்பு நடவடிக்கைகளை எடுங்கள். மக்களுக்கு வேலையும் ஊதியமும் கொடுங்கள். நாட்டின் பொருளாதாரம் மீட்சி அடைந்த பிறகு, படிப்படியாகக் கடனை அடைத்துக்கொள்ளலாம் என்கின்றனர்.

ஐஎம்எஃப் இப்படியெல்லாம் சொன்னால் கேட்டுக்கொண்டு சும்மா போய்விடாது. கடனைத் தருவதற்கு நிபந்தனைகளை விதிப்பதைப் போல, கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் எப்படியெல்லாம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் எழுதியிருக்கும். எனவே, அர்ஜென்டினா அரசால் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தர முடியாதென்று மறுத்துவிட முடியாது. நிதானமாகப் பேசித்தான் கடன் நிபந்தனைகளை மாற்ற வேண்டும், தவணைகளையும் கேட்டுப் பெற வேண்டும்.

கடனுக்கு அஞ்சுவானேன்?

ஐஎம்எஃப் கடன் என்றாலே, நிபந்தனைகள் முன்னால் வரும். அதிலும் பொருளாதாரச் சீர்திருத்தம் அவசியம் என்பார்கள். அதன்படி மின்சாரம், போக்குவரத்துக் கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவற்றையெல்லாம் உயர்த்தச் சொல்வார்கள், அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கச் சொல்வார்கள் அல்லது கட்டுப்பாடுகளைத் தளர்த்தச் சொல்வார்கள், மேற்கத்திய நாடுகளுக்கு மூலப் பொருட்களை அளிப்பதற்குக் கடன் தருவார்கள், மேற்கத்திய நாடுகளின் பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்துவார்கள். கடன் சுமை அதிகமாகி திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நிபந்தனைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. அரசு நிறுவனங்களிலும் அரசுத் துறைகளிலும் ஆள்குறைப்பு, ஊதிய வெட்டு ஆகியவையும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் 2001-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது ஆர்ஜென்டீனியர்கள் நேரிலேயே அனுபவித்தார்கள். எனவேதான் உலக வங்கி, ஐஎம்எஃப் கடன்கள் என்றால் விவரம் தெரிந்தவர்கள் எச்சரிக்கை அடைவார்கள். ரஷியா, சீனா போன்ற நாடுகள் கடன் தந்தாலும் இதே நிலைமைதான். அவர்கள் எல்லாவற்றையும் அரசுடைமையாக்கச் சொல்லிவிட்டு, தங்களுக்கு வேண்டியதை விலை மலிவாக வாங்கிக்கொண்டு நடையைக் கட்டுவார்கள்.

2001-ல் நிதித் துறையில் நெருக்கடி ஏற்பட்டது. அர்ஜென்டினா அரசு தனது செலாவணியின் மதிப்பை, தானே குறைத்தது. பணமதிப்பு குறைப்பு. வங்கிகளில் மக்கள் போட்ட பணத்தைத் திருப்பி எடுக்க கடன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அப்போது 9,300 கோடி டாலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அரசு திண்டாடியது. அதனால் ஏராளமானோர் வேலையிழந்தனர். சமூகத்தில் அமைதியின்மை பரவியது. விலைவாசிகள் விண்ணைத் தொட்டன. அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் அதிகம் செலவிட நேர்ந்தது. இப்போதும் மக்களுடைய சம்பாத்தியம் எல்லாம், உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடத்தான் போதுமானதாக இருக்கிறது. அர்ஜென்டினா பொருளாதார வளம் மிக்க நாடு கிடையாது. அதிக வருவாய் கிடைக்கும் வகையில் தொழில் துறை வளர்ச்சி அடைந்ததாக இல்லை. சேவைத் துறைகளும் அப்படியே. உபரியை உற்பத்தி செய்ய முடியாத நாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் இதற்கும் இருக்கிறது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிவருகிறது.

அர்ஜென்டினாவின் தொழிலதிபர்களும் பணக்காரர்களும் சம்பாதித்த பணத்தையெல்லாம் வரி கட்டாமல் ஏய்த்துவிட்டு, வெளிநாடுகளில் வங்கிகளில் ரகசியக் கணக்குகளில் போட்டும், சொத்துகளை வாங்கியும் மறைத்துவிடுவதால் நாடு திண்டாடுகிறது. வரி ஏய்ப்பைத் தடுத்தாலே, நாடு சிக்கல்களிலிருந்து மீண்டுவிடும் என்று இடதுசாரிகள் கூறுகின்றனர்.

அர்ஜென்டினா - சிறுகுறிப்பு:

தென்னமெரிக்கக் கண்டத்தின் சரிபாதி பரப்புள்ள நாடு அர்ஜென்டினா. பரப்பளவு 27,80,400 சதுர கிலோமீட்டர். பிரேசிலுக்கு அடுத்த பெரிய தென்னமெரிக்க நாடு. 23 மாநிலங்களைக் கொண்ட குடியரசு நாடு. இத்தாலியர்களும் ஸ்பெயின் நாட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் குடியேறினர். ஸ்பானிய மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள நாடு அர்ஜென்டினாதான். அமெரிக்காவைப் போலவே இங்கும் செவ்விந்தியர்கள் போன்ற பூர்வகுடிகள் இருந்தனர். அவர்களுடைய எண்ணிக்கை இப்போது மிக மிகக்குறைவு.

பொருளாதார நிலையில் இது வளரும் நாடு. மனிதவளம் மிகுந்த நாடு. ஜி-15, ஜி-20 அமைப்புகளில் இடம்பெற்றுள்ளது. மக்கள்தொகை 4,56,05,826. ஜிடிபி 1.033 லட்சம் கோடி டாலர்கள். நபர்வாரி வருவாய் 22,997 டாலர்கள். செலாவணியின் பெயர் அர்ஜென்டினா பிசோ. ‘ஆர்ஜென்டம்’ என்றால் வெள்ளி. இந்நாட்டு மலைகள் வெள்ளியைப் போல சூரிய ஒளியில் மின்னுவதால் இந்தப் பெயர் சொல்லி கடலோடிகள் அழைத்தனர். ஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. வெள்ளை இனத்தவர் அதிகம். மதங்களில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மை. கால்பந்து விளையாட்டில் உலக நாயகர்களைத் தந்த நாடு. டீகோ மரடோனா, லயோனல் மெஸ்ஸி உலகப் புகழ் பெற்ற கால்பந்து ஆட்டக்காரர்கள்.

x