ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸைவிடவும் வேகமாகப் பரவக்கூடியது என்றும், தடுப்பூசிகளின் திறனைக் குறைக்கிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ், பெரும்பாலான கரோனா தொற்றுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்திருக்கிறது.
இதுவரை 63 நாடுகளில் ஒமைக்ரான் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. டெல்டா வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் தென்னாப்பிரிக்காவிலும், அதிகமாக இருக்கும் பிரிட்டனிலும் ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. இந்தச் சூழலில், ஒமைக்ரான் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஒமைக்ரான் வைரஸ், நோய்த் தடுப்பாற்றலைத் தாண்டிப் பரவுவது, வேகமாகப் பரவுவது ஆகியவற்றுக்கான காரணிகளைக் கண்டறிவதற்கான தரவுகள் போதவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆரம்பத்தில், தொற்றுக்கு எதிராகவும் பரவுதலைத் தடுக்கவும் போடப்படும் தடுப்பூசிகளின் திறனை ஒமைக்ரான் குறைக்கும் எனக் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கிடைக்கும் தரவுகள், சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும் டெல்டா வைரஸைவிடவும் அதிகமாகப் பரவும் என்றே காட்டுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.
ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்களுக்கு இதுவரை லேசான அறிகுறிகள் அல்லது வெளிப்படையான அறிகுறிகள் அற்ற தன்மைதான் காணப்படுகிறது. எனினும், மருத்துவ ரீதியாக ஒமைக்ரானின் வீரியம் எப்படியானது என்பதை நிறுவுவதற்கு இதுவரை போதுமான தரவுகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தங்கள் தடுப்பூசிகளை 3 தவணைகளில் செலுத்திக்கொள்வது ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராகப் பலன் தரும் என பைஸர்/ பயோஎன்டெக் தடுப்பூசி நிறுவனம் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இப்படிக் கூறியிருக்கிறது.
போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகளைக் கொண்டிருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள், ஒமைக்ரான் தொற்றைத் தவிர்க்க, பூஸ்டர் டோஸ்களைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றன.