சோவியத் வீழ்ச்சிக்குப் பின் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்தேன்!


ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஏற்படுத்தியிருக்கும் பதற்றம் தொடர்பான செய்திகளுக்கு நடுவில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறித்த உருக்கமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கூடுதல் வருமானத்துக்காக சில காலம் தனியார் வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றியதாகப் பேசியிருக்கிறார் புதின்.

‘சேனல் ஒன்’ எனும் ரஷ்யத் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ரஷ்யா: சமீபத்திய சரித்திரம்’ எனும் ஆவணப்படத்தில், புதின் இவ்வாறு பேசியிருப்பதாக, ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி வெளியிட்டிருக்கிறது

1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சரிவு ரஷ்யர்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியது. இதையடுத்து, வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள வெவ்வேறு பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களில் தானும் ஒருவர் என்பதாகக் காட்டிக்கொள்கிறார் புதின்.

“சில சமயங்களில் கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. அதாவது காரை வைத்துக் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஒரு தனியார் வாடகைக் கார் ஓட்டுநராக வேலை பார்த்தேன். அதைப் பற்றிப் பேசுவது விரும்பத்தகாதது என்றாலும், அதுதான் உண்மை” என்று புதின் கூறியிருக்கிறார். ரஷ்யாவில் அந்தக் காலகட்டத்தில் டாக்ஸிகள் அதிகம் இல்லை. சொந்தமாகக் கார் வைத்திருந்தவர்கள், கூடுதல் வருமானத்துக்காகத் தங்கள் கார்களை டாக்ஸிகளாகப் பயன்படுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றனர். புதினும் வருமானத்துக்காகத் தனது சொந்தக் காரைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பணிகளைச் செய்துவந்த கேஜிபி அமைப்பில் பணிபுரிந்தவர் புதின். 1991 ஆகஸ்ட் மாதம், அப்போதைய அதிபர் மிகையீல் கோர்பச்சேவின் ஆட்சிக்கு எதிராக நடந்த ராணுவ சதிக்குப் பின்னர் கேஜிபி-யிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகப் புதின் முன்பு குறிப்பிட்டிருக்கிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு அந்தச் சதி முயற்சி முக்கியமான காரணியாக அமைந்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி குறித்து, பல முறை வருத்தத்துடன் பேசியவர்தான் புதின். வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்யாவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அது என அவர் கூறியிருக்கிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் பெரும்பாலான மக்கள் ஒரு துயர நிகழ்வாகக் கருதுகிறார்கள் என்றும் பேசிவருபவர் அவர். ஆனால், அந்தக் காலகட்டத்தில், தனது சொந்த வாழ்க்கையிலும் சிரமங்கள் ஏற்பட்டதாக இதற்கு முன்னர் அவர் பேசியதில்லை.

1952 அக்டோபர் 7-ல் லெனின்கிராடில் பிறந்த புதின், லெனின்கிராட் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 15 ஆண்டுகள் கேஜிபியில், வெளிநாட்டு உளவு அதிகாரியாகப் பணியாற்றியவர். கிழக்கு ஜெர்மனியிலும் உளவுப் பணிகளில் இருந்தவர். கேஜிபியிலிருந்து விலகி சில காலம் லெனின்கிராடு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த புதின், செயின்ட் பீட்டர்ஸ்பெர்கின் (1991-க்குப் பிறகு செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் எனப் பெயர் மாற்றம் பெற்றது லெனின்கிராடு) மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோப்சாக்கின் ஆலோசகராக மாறினார். அவரது நம்பிக்கைக்குரிய நபராகச் செயல்பட்ட புதின், 1994-ல் துணை மேயரானார். 1996-ல் தலைநகர் மாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்த புதின், க்ரெம்ளின் மாளிகையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றிய பாவெல் போரோடினின் உதவியாளரானார். குறுகிய காலத்திலேயே, ரஷ்யாவின் அப்போதைய அதிபர் போரிஸ் யெல்ட்ஸினின் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்த புதினுக்கு 1999-ல் பிரதமர் பதவி கிடைத்தது. அதன் பின்னர் அவர் அதிபராகவும் ஆனது தனிக்கதை!

சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனுக்குள் ஊடுருவும் முயற்சியில், 90,000-க்கும் மேற்பட்ட ரஷ்யத் துருப்புகள் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கும் சூழலில், புதின் இப்படிப் பேசியிருப்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.

x