புதுப்பிக்கப்படும் ரஷ்ய - இந்திய நேசம்


மோடி - -புதின்

உக்ரைன் தேசத்துடனான போர், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் சூழல் ரஷ்ய எல்லையில் நிலவுகிறது. எல்லைக்குள் நாள்தோறும் சராசரியாக ஆயிரம் ரஷ்ய குடிமக்கள் கரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். இந்த இக்கட்டுகளுக்கு மத்தியிலும் டிச.6 அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது 4 மணி நேர டெல்லி இருப்புக்காக, 6 மணி நேரம் பயணித்து இந்தியா வந்திருந்தார்.

முன்னதாக ரோமில் நடைபெற்ற ஜி20 மாநாடு, கிளாஸ்கோவின் பருவநிலை மாநாடு, சீனாவின் ஏற்பாட்டிலான தஜிகிஸ்தான் மாநாடு என சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை உதாசீனம் செய்திருந்தார் புதின். டெல்லியில் கைகுலுக்கிய புதினும் மோடியும் உலகுக்கு முக்கியமான சில செய்திகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இந்தியாவின் ஆயுத பூஜை

பாஜக பதவியேற்றது முதலே எல்லைப் பாதுகாப்பு, ஆயுத தளவாடங்களில் நவீனம் என முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படையணிகளுக்கு புது ரத்தம் பாய்ச்சி வருகிறது. அந்த வகையில் தலைமுறைக்கு முந்தைய ஆயுதங்கள் பலவற்றுக்கு விடைகொடுக்க முடிவு செய்தது. பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளில் அதற்கான கொள்முதல்கள் நடைபெற்ற போதும் ரஷ்யாவுடனான கொள்முதல், பிரம்மாண்டமானது என்பதுடன் வேறுபல புரிதல்களும் அதில் பொதிந்திருந்தன .

வெறுமனே ஆயுதங்களை வாங்குவதோடு, அவற்றை சுயமாக தயாரித்துக் கொள்வதற்கான காப்புரிமையையும் சேர்த்தே ரஷ்யா தந்தது. இப்படி, புதினின் டெல்லி விஜயத்தில் 28 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. முப்படைகளுக்குமான தளவாடங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் விண்வெளி ஏற்பாடான கங்காயான், அணு உலைகள் மற்றும் அணுநீர்மூழ்கிகளுக்கான உதவிகள் மற்றும் ஏராளமான வர்த்தக ஒப்பந்தங்களும் முடிவாயின.

ஏகே 203

ஆத்மநிர்பாரில் குவியும் ஏகே 203

ஆயுத கொள்முதலில், சுமார் ஏழரை லட்சம் ஏகே 203 துப்பாக்கிகள் தயாரிப்பு என்பது முக்கியமானது. ரூ.5,100 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்கீழ், 5 லட்சத்துக்கும் மேலான ஏகே 203 துப்பாக்கிகளை இந்தியாவே சுயமாக தயாரித்துக்கொள்ளும். 30 ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களின் கையிலிருக்கும் இன்சாஸ் துப்பாக்கிகளை, இந்த ஏகே 203 துப்பாக்கிகள் இடம்பெயர்க்க இருக்கின்றன. உத்தர பிரதேசம், அமேதியில் அமைந்திருக்கும் ஆயுத தொழிற்சாலையில் அடுத்துவரும் வருடங்களில் இந்த ஏகே 203 மலைபோல குவிய இருக்கின்றது.

அமெரிக்கா-சீனாவை சதாய்க்கும் எஸ் 400

நவீன கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன், வான் எல்லையில் ஊடுருவும் எதிரி விமானங்களை கண்டதும் பாய்ந்து தகர்க்கும், எஸ் 400 என்ற வான் பாதுகாப்பு சாதனமும் இந்த ஒப்பந்தத்தில் முக்கியமானது. முன்னதாக, இதே பாதுகாப்பு அம்சங்களை ஒத்த அமெரிக்க சாதனங்களையும் இந்தியா பரிசீலித்தது. கடைசியில், ரஷ்யாவின் எஸ் 400 சிஸ்டத்தை இந்தியா தேர்வு செய்ததில் அமெரிக்கா எரிச்சலடைந்தது. ரஷ்யாவின் வான் பாதுகாப்பு தளவாடத்தை வாங்கினால், பொருளாதார தடை உட்பட பல்வேறு மிரட்டல்களை விடுத்துப் பார்த்தது. இந்தியா அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

இன்னொரு பக்கம், எஸ் 400 தளவாடத்தை இந்தியாவுக்கு விற்பதற்கு எதிராக சீனாவும் ரஷ்யாவை நெருக்கிப் பார்த்தது. கணிசமான எண்ணிக்கையில், ரஷ்யாவிடமிருந்து சீனா அவற்றை அண்மையில் வாங்கி இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்காவைப் புறந்தள்ளி தன்னிடம் நேசக்கரம் நீட்டும் இந்தியாவுக்காக, ரஷ்யாவும் சீனாவின் அழுத்தத்தை புறக்கணித்தது. இந்த வகையில், ரஷ்யா-இந்தியா என 2 நாடுகளும் ஆயுதத் தளவாட ஒப்பந்தங்களுக்கு அப்பாலும் உலகத்துக்கு வேறு பல சமிக்ஞைகளை தந்துள்ளன.

எஸ் 400 வான் பாதுகாப்பு தளவாடம்

மீண்டும் வில்லனாகுமா ரஷ்யா?

புத்தாயிரத்துக்கு முன்புவரை ஹாலிவுட் சாகசப் படங்களின் பிரதான வில்லனாக ரஷ்யரோ, நாச வேலைகளுக்கான மையமாக ரஷ்யாவோ சித்தரிக்கப்படுவது வழக்கம். அதன் பிறகான ஆண்டுகளில் அந்த இடத்தை சீனா எடுத்துக்கொண்டது. நிஜத்திலும் வணிகத்தில் தொடங்கி, ஆயுத பலத்துக்கான கோதா வரை அமெரிக்காவை அதிகம் உரசும் தேசமாக சீனாவே வளர்ந்து நிற்கிறது. சோவியத் கூட்டமைப்பு உடைந்த பிறகும், தான் வலுவிழக்கவில்லை என்பதை ரஷ்யா நிரூபிக்கக் காத்திருக்கிறது. அதற்காகவே, அமெரிக்கா மற்றும் சீனாவுடன் அதிகம் ஒட்டாத இந்தியா போன்ற பெரும் தேசத்துடன் தனது நேசத்தை புதுப்பித்திருக்கிறது. இந்த வகையில் இன்னும் முன்னேறினால், விரைவில் ஹாலிவுட் படங்களில் வில்லனாகும் வாய்ப்பு மீண்டும் ரஷ்யாவுக்கு கிடைக்கக்கூடும்.

இந்தியாவின் கணக்குகள்

அமெரிக்காவுடனான எதிர்நிலையில் சீனாவின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் ரஷ்யா, பிராந்திய அளவில் சீனாவுடன் தோழமை பேணியே வருகிறது. இரு தேசங்களுக்கும் அடிப்படையான பொதுவுடமைக் கோட்பாடு, ஆட்சியில் நிரந்தரமாக ஒட்டிகொள்ளும் அதிபர்களின் தீவிரம், அதற்கு உதவும் சித்தாந்தக் கட்சி மற்றும் ராணுவக் கட்டுப்பாடு என ரஷ்யாவும், சீனாவும் ஒரே பாதையில் பயணித்து வருகின்றன.

இவற்றின் மத்தியில், தனது எல்லையில் சீனாவால் பெரும் தொல்லைகளை சமாளித்து வரும் இந்தியா, ரஷ்யாவுடன் நெருங்குவதன் மூலம் சீனாவுக்கு செக் வைக்கப் பார்க்கிறது. சீனாவுக்கு நிகரான ஆயுத பலத்தை திரட்ட ரஷ்ய உதவியையே இந்தியா நம்புகிறது. இன்று என்றில்லை, சுதந்திர இந்தியா உதயமானது முதலே ரஷ்யாவுடனான பற்றிப்படரும் நேசத்தை இந்தியா அவ்வப்போது புதுப்பித்து வருகிறது.

சீனாவுக்கு அப்பால், அமெரிக்காவுக்கு நெருக்கடி தரும் வகையிலும் ரஷ்யாவுடன் சிநேகம் பாராட்டுகிறது இந்தியா. அதிலும், மோடியின் அண்மை அமெரிக்க விஜயத்தில் ஜோ பைடன் நிர்வாகத்துடனான புரிதல்களில் பல அபசுரங்களை இந்தியாவால் உணர முடிந்தது. அந்த வகையில் மோடி அமெரிக்காவிலிருந்து திரும்பிய வேகத்தில், கிடப்பிலிருந்த ரஷ்ய உறவுகளுக்கு உரமிடும் பணிகள் வேகம் பெற்றன.

நந்தியாக நிற்கும் ஆப்கன் விவகாரம்

பதில் மரியாதையாக ரஷ்யாவும் இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் தருகிறது. டிச.6 புதினின் இந்திய விஜயத்தின்போது, அது ரஷ்ய அதிபர் - இந்தியப் பிரதமர் இடையிலான சந்திப்பாக மட்டும் அமையவில்லை. இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையும் அவற்றில் இடம்பெற்றன. இதுவரை 3 நாடுகளுடன் மட்டுமே பிரத்யேகமாக ரஷ்யா பாவித்திருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில், சீனா இதுவரை இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், ரஷ்யாவும் இந்தியாவும் எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா காலி செய்த ஆப்கானிஸ்தானுடன் ரஷ்யா நெருக்கம் பாராட்டி வருகிறது. ஆப்கன் மேம்பாட்டுக்காக பெரும் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்த இந்தியா, தற்போதைய தாலிபான்களிடம் தள்ளி நிற்கிறது. இதுபோன்ற சிறு முரண்கள் தென்பட்டாலும், அமெரிக்கா-சீனா என்ற இருமைக்கு எதிராக, தங்களுக்கான தனிப்பட்ட கணக்குகளுடன் ரஷ்யாவும், இந்தியாவும் முன்னெடுக்கும் உறவு பாராட்டல், புவிசார் அரசியலிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் பிரதான இடம்பிடித்திருக்கின்றன.

x