ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும் தவறான தகவல்கள்!


பாதுகாப்புக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக, தவறான தகவல்கள் வளர்ந்துவருவதாக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரதோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் அமைதி விருது கூட்டாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (டிச.10) நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடந்த நோபல் பரிசு வழங்கும் நிகழ்வில் இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர், கத்தார் ஊடகமான ‘அல் ஜஸீரா’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தவறான தகவல்கள், பொய்ச் செய்திகள், பொய்கள் உண்மைகளாக்கப்படுவது, உண்மைகள் சந்தேகிக்கப்படுவது போன்றவற்றின் அபாயம் குறித்து இருவரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் முக்கியமானவை.

பொய்கள் உண்மைகளாக்கப்படுவது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என மரியா ரெஸ்ஸாவும், ஆபத்தான ‘போஸ்ட் ட்ரூத்’ (உண்மை கடந்த) காலகட்டத்தில் சமூகம் இருப்பதாக டிமிட்ரி முரடோவும் கூறியிருக்கிறார்கள்.

“தகவல்கள் திரிக்கப்படுவது போருக்கு வழிவகுக்கிறது. நாம் போஸ்ட்-ட்ரூத் காலகட்டத்தின் நடுவில் இருக்கிறோம். இப்போது, உண்மையைவிடவும், தங்கள் சொந்தக் கருத்துகள் குறித்துதான் ஒவ்வொருவரும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கும் முரடோவ், “எது உண்மை எது பொய் எனத் தெரிந்திருந்தாலும், பொய்யான விஷயங்கள் தங்களுக்குப் பிடித்திருப்பதால், 75 சதவீத மக்கள் பொய்யையே உண்மையாகக் கருதிக்கொள்வார்கள் என சமூக விஞ்ஞானிகள் உணர்த்தியிருக்கிறார்கள் ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்ட காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது உண்மைகளுக்காக ஒரே பக்கத்தில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கும் மரியா ரெஸ்ஸா, “உண்மைகள் இப்போது சந்தேகிக்கப்படுகின்றன. இவ்விஷயத்தில் செய்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

x