சீனா, மியான்மர், வட கொரியா மீது பொருளாதாரத் தடை!


மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சீனா, மியான்மர், வட கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மீதும், தனிமனிதர்கள் மீதும் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்கா.

டிசம்பர் 9 ,10 தேதிகளில் ஜனநாயகத்துக்கான உச்சி மாநாடு காணொலிச் சந்திப்பாக நடந்திருக்கிறது. இந்த மாநாட்டில், 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில், ஜனநாயகத்தை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாநாட்டின் 2-வது நாளான நேற்று (டிச.10) இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.

“இந்த நடவடிக்கையானது, துன்பத்தையும் அடக்குமுறையையும் ஏற்படுத்தும் வகையில் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்த்தும் செய்தி ஆகும்” என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

ஜின்ஜியாங் மாகாணம், திபெத், ஹாங்காங் ஆகிய இடங்களில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சீனா மீது, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏறத்தாழ 10 லட்சம் உய்குர் முஸ்லிம்களும், துருக்கிய பேசும் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களும் முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறியிருக்கின்றன. அங்கு, பலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. பெய்ஜிங் நகரில் 2022-ல் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதில்லை என அமெரிக்கா முடிவெடுத்ததற்கு இவையெல்லாம் முக்கியக் காரணங்கள் ஆகும்.

அதேபோல், முகத்தை அடையாளம் கண்டு ஒருவர் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை, சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘சென்ஸ் டைம்’ உருவாக்கிவருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண்பதற்காகவே இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்த பிறகு, அங்கு பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. ராணுவத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்க ராணுவத்துக்கும் காவல் துறைக்குமான ஆயுதங்களைத் தயாரிக்கும் அந்நாட்டின் பாதுகாப்பு தொழில் துறை இயக்குநரகம் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரின் பகோ பிராந்தியத்தின் முதலமைச்சரான மியோ ஸ்வீவின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டினரைச் சிறைபிடித்ததாக வட கொரியாவின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் மீதும் இந்நடவடிக்கை பாய்கிறது.

இந்த நடவடிக்கைக்கு பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

x