ஆங் சான் சூச்சிக்குச் சிறைத்தண்டனை: இந்தியா கவலை


மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, இந்தியாவைக் கவலையுறச் செய்திருக்கிறது.

“அண்டை ஜனநாயக நாடு எனும் முறையில், மியான்மரின் ஜனநாயக மாற்றத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்துவருகிறது. இந்நிலையில், சமீபத்திய தீர்ப்பு இந்தியாவைக் கவலையுறச் செய்திருக்கிறது” என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “மியான்மரில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக வழிமுறையும் நிலைநாட்டப்பட வேண்டும். இதைப் பின்னடையச் செய்யும் வகையிலான போக்கு தொடர்வது ஆழ்ந்த கவலையளிக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் மியான்மருக்கும் நீண்ட கால உறவு உண்டு. 2016-ல் மியான்மர் ஸ்டேட் கவுன்சிலர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எனும் முறையில் இந்தியாவுக்கு வருகை தந்த ஆங் சான் சூச்சியை, ‘கிழக்கிலிருந்து வரும் பழைய நண்பர்’ என இந்திய வெளியுறவுத் துறை வர்ணித்தது குறிப்பிடத்தக்கது. 2017-ல் மியான்மர் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரைச் சந்தித்ததுடன், ஆங் சான் சூச்சியையும் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிய வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு 3 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 வருடச் சிறைத் தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கு தவிர, உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நடந்துகொண்டது என்பன உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

இந்த ஒரு வழக்கில் 4 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற வழக்குகளில் அவருக்கு விதிக்கப்படும் தண்டனைகள், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்வகையில் அமையும் என்றே கருதப்படுகிறது. அப்படி நடந்தால், மியான்மர் மீண்டும் ஜனநாயக ஆட்சி துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் அருகிவிடும்.

x