சினிமா பார்த்தது குற்றம்: சிறுவனுக்கு 14 ஆண்டு சிறை


மாதிரி படம்

வட கொரியாவில், பகை நாடான தென் கொரிய திரைப்படத்தை பார்த்த குற்றத்துக்காக, பள்ளி சிறுவனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

வட கொரியாவின் யன்ங்கன் மாகாணம் ஹெய்சான் பகுதியின், இடைநிலைப் பள்ளியில் பயிலும் 14 வயது சிறுவனை அண்மையில் போலீஸார் கைது செய்தனர். ‘தடை செய்யப்பட்ட’ சினிமாவை அவன் பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ’தி அங்கிள்’ என்ற தென் கொரிய திரைப்படத்தை சிறுவன் பார்த்தது உறுதியானது.

அமெரிக்கா, தென் கொரியா ஆகிய தேசங்களை பகை நாடுகளாக அறிவித்துள்ள வட கொரியா, அந்நாடுகளின் இசை, திரைப்படம், ஓவியம், புத்தகம் உள்ளிட்ட எதையும் பார்க்கவோ, விநியோகிக்கவோ, வைத்திருக்கவோ தடை விதித்திருக்கிறது. அந்த நாடுகளின் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் உடையோ, சிகை அலங்காரமோ வைத்திருப்பதும் சட்டப்படி அங்கே குற்றம்.

சிறுவன் வழக்கில், தென் கொரிய திரைப்படத்தை 5 நிமிட நேரத்துக்கு அவன் பார்த்தது உறுதி செய்யப்பட்டதில், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவேளை சிறுவன் கூடுதல் நேரம் திரைப்படத்தை பார்த்திருப்பின், சிறைத் தண்டனையும் அதற்கேற்ப அதிகரித்திருக்கும்.

தனது பிரத்யேக தோலங்கியில் அதிபர் கிம் ஜாங்-உன்

வட கொரியாவில் பல சட்டங்களும் தண்டனைகளும் விநோதமானவை. சில தினங்களுக்கு முன்னர் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் போல, தோல் அங்கி அணிவோருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. அதிபர் ஆடையை அடியொற்றி அணிந்ததற்கான தண்டனை அல்ல. அதிபர் ஸ்டைலில் முடி வெட்டிக்கொள்வதும், உடுத்துவதும் அங்கே விசுவாசத்தின் குறியீடாக ஊக்குவிக்கப்படும்.

தோலங்கி விவகாரத்தில், தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்ட வசதியற்றவர்கள் உடுத்திய, விலை குறைவான தோலங்கிகள் சர்ச்சைக்கு ஆளாயின. மட்ட ரக அங்கி அணிவது அதிபரை அவமதிப்பதில் சேரும் என்று வட கொரியா அரசு பின்னர் அறிவித்தது. இதனால், தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்ட, வசதியானவர்களுக்கு மட்டுமே அங்கே வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

x